கடந்த சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள ஹெராத் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் 6.3 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலநடுக்கமாக பதிவாகியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை 2000ஆயிரத்தை கடந்திருப்பதாக கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலின் படி, ஆப்கானிஸ்தானில் பல நிலநடுக்கங்கள் தாக்கியதாகவும் அதில் மிகப்பெரிய ஒன்று 6.3 ரிக்டரில் பதிவானதாகவும், இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 2,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் 9,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல ஆண்டுகளில் இல்லாத பயங்கரமான நடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கூற்றின் படி, “சனிக்கிழமையன்று பல நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தான் ஹெராட் நகரின் வடமேற்கில் 35 கிமீ தொலைவில் தாக்கியது. அதில் ஒன்று 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்தும், பலி எண்ணிக்கை குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு துணையாக நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய உலகக்கோப்பை போட்டிக்கான அனைத்து கட்டணத்தையும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் நிதி திரட்டுவதற்கான பிரச்சாரம் நடத்தப்பட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளங்களான எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ரஷீத் கான், “ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணங்களில் (ஹெரத், ஃபரா மற்றும் பத்கிஸ்) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சோகமான விளைவுகளைப் பற்றி அறிந்தவுடன் மிகுந்த வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எனது உலகக்கோப்பை போட்டிக்கட்டணம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில் உதவி தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை ஒன்றிணைக்கும் வகையில் நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்குவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.