இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடம்பிடிப்பதற்கு, ரஞ்சிப் போட்டிகளும் முக்கிய இடம்வகிக்கின்றன. அந்த வகையில், நடப்பு ஆண்டின் 89வது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய இந்த சீசனில் 38 அணிகள் மோதின. இதில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் தமிழக அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியதுடன் முதல் அணியாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா - மத்தியப் பிரதேச அணிகள் மோதின. இதில் 62 ரன்களில் வெற்றி பெற்ற விதர்பா 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து மும்பையுடன் விதர்பா அணி, வரும் 10ஆம் தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது. மும்பை, விதர்பா ஆகிய அணிகள் ரஞ்சிக் கோப்பை இறுதிச்சுற்றில் மோதுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு 2017-18 மற்றும் 2018-19 ரஞ்சிக் கோப்பை போட்டியில் விதர்பா அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையையும் வென்றது. இந்நிலையில் விதர்பா அணி மூன்றாவது முறையாக ரஞ்சிக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடுகிறது.
இந்த ரஞ்சிக் கோப்பை தொடரில் மும்பை அணி 40 முறை கோப்பையை வென்றுள்ளது. இதில் 15 முறை (1958-73) தொடர்ச்சியாகக் கோப்பையை வென்று சாதனை படைத்த ஒரே அணியாக மும்பை வலம்வருகிறது. எனினும், கடைசியாக கடந்த 2015-16ஆம் ஆண்டுதான் கோப்பையை வென்றிருந்தது. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 42வது முறையாக கோப்பையை வெல்லக் காத்திருக்கிறது. எனினும் அதற்குப் பிந்தைய காலக்கட்டங்களில் தொடர்ச்சியாய் வென்ற விதர்பா அணி, 3வது முறையாக கோப்பையைக் கைப்பற்ற இருக்கிறது. ஆகையால் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி கொஞ்சமும் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று சொல்லலாம்.
1934-35, 1935-36, 1941-42, 1944-45, 1948-49, 1951-52, 1953-54, 1955-56, 1956-57, 1958-59, 1959-60, 1960-61,1961-62,1962-63,1963-64,1964-65,1965-66, 1966-67, 1967-68, 1968-69, 1969-70, 1970-71, 1971-72, 1972-73, 1974-75, 1975-76, 1976-77, 1980-81, 1983-84, 1984-85, 1993-94, 1994-95, 1996-97, 1999-00, 2002-03, 2003-04, 2006-07, 2008-09, 2009-10, 2012-13, 2015-16.