பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எந்த விஷயத்தையும் நிர்வகிப்பது கடினம் என்றும், இனியாவது அணிக்குள் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார் முன்னாள் வீரரும், முன்னாள் கிரிக்கெட் சங்கத் தலைவருமான ரமீஸ் ராஸா.
அந்த அணியின் ஒருநாள் மற்றும் டி20 பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் தற்போது ராஜினாமா செய்திருக்கும் நிலையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. இங்கு எதையுமே நிர்வகிப்பது எளிதான விஷயம் இல்லை. ஏனெனில் இங்கு அனைத்துமே படுவேகமாக நடக்கும்" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அவர்.
உலக கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற பயிற்சியாளராக விளங்கும் கேரி கிர்ஸ்டன், கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். வெறும் 6 மாதங்களே இந்தப் பணியில் நீடித்த அவர், தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஒவ்வொரு முடிவிலும் பாகிஸ்தான் நிர்வாகமும், தேர்வுக் குழுவும் தலையீடு செய்ய, அது கிர்ஸ்டனுக்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கிறது. கேப்டன் தேர்வு முதல் பல விஷயங்களில் எதுவும் ஒத்துப்போகாததால், அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கிரிக்கெட் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விமர்சனங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட்.
இந்த விஷயம் பற்றிப் பேசிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ரமீஸ் ராஸா, "நீங்கள் சர்வதேச பயிற்சியாளர்களை தேடுவது இப்போது கடினமான விஷயமாக மாறப்போகிறது. கேரி கிர்ஸ்டன் போன்ற ஒரு பயிற்சியாளர் ராஜினாமா செய்திருப்பதாலும், அதனால் ஏற்பட்டிருக்கும் சலசலப்புகளாலும் இனி ஒரு சர்வதேச பயிற்சியாளரை அழைத்து வருவது என்பது எளிதாக இருக்கப்போவதில்லை" என்று கூறினார். அடுத்ததாக அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யவிருப்பதால், அதைக் குறிப்பிட்டு இது எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று கூறினார் அவர்.
மேலும் பேசிய அவர், "நீங்கள் சில விஷயங்களை உறுதி செய்வது மிகவும் அவசியம். ஒருவரை நீங்கள் வேலைக்கு அமர்த்தும்போது, அவர்களுக்கு தங்கள் வேலை பற்றிய தெளிவை ஏற்படுத்துவது மிக மிக முக்கியம். கேரி கிர்ஸ்டனுக்கு அந்த தெளிவு கொடுக்கப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. அதேபோல் இந்த ஒருநாள் போட்டிகள் நிறைந்த காலகட்டத்தை அவர் எப்படி அணுகப்போகிறார் என்பது பற்றியோ, அவர் என்ன சாதிக்க நினைக்கிறார் என்பது பற்றியோ எந்த ஆலோசனையும் நடத்தப்பட்டதா தெரியவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், கிர்ஸ்டன் இப்போது ராஜினாமா செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி அல்ல. நம் கிரிக்கெட்டுக்கு அனுபவம் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா போன்ற ஒரு இடத்துக்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு முன் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது மிகவும் மோசமானதாகவே தெரியும்" என்று தன் வருத்தத்தைப் பதிவு செய்தார்.
இதையும் படிக்க: ’என் பயிற்சியாளர் வாழ்க்கையில் இப்படிஒரு மோசமான அணியை பார்த்ததில்லை..’ PAK-ஐ விளாசிய கேரி கிர்ஸ்டன்!
அதேசமயம் தற்போது, 3 மாதங்களில் மூன்றாவது முறையாக பாகிஸ்தானின் தேர்வுக் குழு மாற்றப்பட்டிருக்கிறது. அதில் நடுவர் அலீம் தார் இடம்பெற்றிருப்பதும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுபற்றியும், தற்போது முகமது ரிஸ்வான் ஷார்ட் ஃபார்மட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது பற்றியும் ரமீஸ் ராஸாவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கிரிக்கெட்டை நிர்வகிக்க முடியாது. அந்த தலைவருக்குப் பொறுப்புகள் கொடுக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு சில அதிகாரமும் கொடுக்கவேண்டும்.
முகமது ரிஸ்வானுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தன் முத்திரையைப் பதிக்கவேண்டும். தனக்குத் தேவையான வீரர்களைப் பெற முயற்சி செய்யவேண்டும். இப்போது அணியில், அணித் தேர்வில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. தேர்வுக் குழுவே பிளேயிங் லெவனை முடிவு செய்துகொண்டிருக்கிறது. இது உலகின் வேறு எங்குமே நடக்காத விஷயம் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். ரிஸ்வான், தனக்குத் தேவையான பிளேயிங் லெவனைப் பெறவேண்டும் என்பது தான் என் விருப்பம்" என்று கூறினார்.
இதையும் படிக்க: “PAK உடன் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.. இந்தியாவிற்கு வாருங்கள்”- கேரி கிர்ஸ்டனை அழைத்த ஹர்பஜன்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் புதிய கேப்டனோடு களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு, ஜேசன் கில்லெஸ்பி இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்படவிருக்கிறார்.