“அடுத்தமுறை நல்ல வீரர்களை வாங்குங்கள்; காவ்யாவை சோகமாக பார்க்கமுடியவில்லை” - கோரிக்கை வைத்த ரஜினி!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் உரிமையாளரான கலாநிதி மாறனிடன் அடுத்தமுறை அணியில் நல்ல வீரர்களை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ரஜினிகாந்த் - காவ்யா மாறன்
ரஜினிகாந்த் - காவ்யா மாறன்Twitter
Published on

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் படத்தில் நடித்திருந்த பல்வேறு நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த், குடிப்பழக்கம் தன் வாழ்க்கையில் தான் செய்த பெரிய தவறு என்று வருத்தப்பட்ட அவர், ரசிகர்களுக்காக காக்கா-பருந்து கதை ஒன்றை கூறினார்.

பருந்தை பார்த்து காகமும் உயரத்திற்கு செல்ல ஆசைப்படும்!

விலங்குகளில் சேட்டையானது குரங்கு. பறவைகளில் சேட்டையானது காகம். காகம் ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் தாவிக் கொண்டும் பறந்து கொண்டிருக்கும். ஆனால், பருந்து மிக உயர பறந்து கொண்டிருக்கும். கழுகு உயரத்தில் பறப்பதை பார்த்த காகம் தானும் பருந்தை போல பறக்க வேண்டும் என்ற ஆசையில், மேலே பறந்து சென்று கழுகை கொத்தும். ஆனால், பருந்து காகத்தை ஒன்றும் செய்யாமல், இன்னும் கொஞ்சம் மேலே பறந்து சென்று விடும். காகம் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்படும். ஆனால், முடியாமல் கீழே விழுந்து விடும்.

எனவே, நம்மை யாராவது எதிர்த்தால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்து முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். நான் தற்போது சொன்னதை உடனே சமூக ஊடகங்களில் ரஜினிகாந்த் அவரை காகம் என்று சொல்லிவிட்டார், இவரை பருந்து என்று சொன்னார் என்றெல்லாம் ஏதாவது எழுதுவார்கள். குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை. ஆகமொத்தத்தில் இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை. எனவே, நாம் நம்முடைய வேலையை பார்த்துக்கொண்டு போயிக்கிட்டே இருப்போம் என்று பேசினார்.

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியில் நல்ல வீரர்களை எடுங்கள்!

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் ஜெயிலர் பட தயாரிப்பாளரான கலாநிதி மாறனிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். அப்போது பேசிய அவர், “கலாநிதி சார் கிட்ட நான் கேட்குறது என்னனு சொன்னா, சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்தமுறையாவது நல்ல வீரர்களை கொடுங்க. ஐபிஎல்ல சன்ரைசர்ஸ் அணி சரியாக விளையாடாத போது காவ்யாவின் சோகமான முகத்தை டிவியில் பார்க்கமுடியவில்லை” என்று கூறினார்.

2013-ஆம் வருடத்தில் இருந்து ஐபிஎல்லில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, கடந்த 10 வருட பயணத்தில் 2016-ம் ஆண்டு மட்டுமே ஒரேயொரு முறை டேவிட் வார்னர் தலைமையில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த 2 வருடங்களாக சொதப்பி வரும் அந்த அணி, இந்த வருட 2023 ஐபிஎல் தொடரில் நல்ல வீரர்கள் அணியில் இருந்தும் கூட புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்தது. 14 போட்டிகளில் விளையாடிய அந்த அணி வெறும், 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.

kavya maran
kavya maran

ஐபிஎல் ஏலத்தில் தொடங்கி, ஒவ்வொரு சன்ரைசர்ஸ் போட்டியின் போதும் தலைமை நிர்வாக அதிகாரியான காவ்யா மாறன் அணிக்காக தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்துவார். வெற்றியின் போது துள்ளிக்குதிப்பதும், தோல்வியின் போது வருத்தமாக ரியாக்ட் செய்வதும் என அனைத்து SRH போட்டியின் போதும் காவ்யாவின் முகபாவனை இணையத்தில் டிரெண்ட் ஆகும். அதனை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாது நடிகர் ரஜினிகாந்தும் தற்போது இந்த வேண்டுகோளை வைத்துள்ளார். SRH அணி டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் என இரண்டு கேப்டன்களையும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com