"THE WALL" என வைக்கப்பட்டிருக்கும் பட்டப்பெயருக்கு சால பொருத்தமானவர் ராகுல் டிராவிட். “இந்திய கிரிக்கெட்டின் சுவர்” என்ற பெயரெல்லாம் எளிதில் அவருக்கு கிடைத்துவிடுவதில்லை. அந்த பெயரை சுமப்பதற்கு அவர் பல ஜாம்பவான் பந்துவீச்சாளர்களின் உடல்வலியோடு வயிற்றெரிச்சலை எல்லாம் வாங்க வேண்டியிருந்தது.
ஆம் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஒரு பவுலரை பெரிய ஃபுட் ஒர்க் இல்லாமல் நின்ற இடத்திலேயே பந்தை தடுத்து நிறுத்திவிடுவார் ராகுல் டிராவிட். சுற்றியிருக்கும் ஃபீல்டர்களும் நகரவேண்டியதில்லை, பேட்ஸ்மேனும் நகரவேண்டியதில்லை, விக்கெட் கீப்பரும் நகரவேண்டியதில்லை, 150 கிமீ வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் வீசிவிட்டு, பவுலர் ஒருவர் மட்டும் ஓடி ஓடிக்கொண்டிருந்தால் கடுப்பாகும் இல்லையா!. அப்படி வேகப்பந்துவீச்சாளர்களின் ஆற்றலை பறித்துவிட்டு சோர்ந்திருக்கும் போது பவுண்டரிகளை விரட்டுவதில் வல்லவர்தான் “WALL" என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்.
பெயருக்கு ஏற்றார் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்திருக்கும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31,258 பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தான். அதாவது கிட்டத்தட்ட 5210 ஓவர்களை அவர் ஒருவர் மட்டும் எதிர்கொண்டுள்ளார். அவரை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளுக்கு அருகில் கூட வரவில்லை. அவருக்கு அடுத்த இடத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் (29437 பந்துகள்), ஜாக் காலிஸ் (28903 பந்துகள்), ஷிவ்நாராயண் சந்தர்பால் (27395 பந்துகள்), ஆலன் பார்டர் (27002 பந்துகள்) முதலிய வீரர்கள் உள்ளனர்.
ராகுல் டிராவிட் களத்திற்கு வந்துவிட்டால் “வாங்க போயிட்டு சாப்டுட்டு டீ குடிச்சிட்டு பொறுமையாக வரலாம்” எனுமளவு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு பொறுமையாகவும் நிதானத்துடனும் வேறுவேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். அந்தளவு டிராவிட் அவுட்டாகவும் மாட்டார், மற்றமுனையில் இருக்கும் வீரரை அவுட்டாக விடவும் மாட்டார், நிலைத்து நின்று ஆடக்கூடியவர் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.
ஒருமுறை அவரிடம் எப்படி உங்களால் அதிக நேரம் களத்தில் இருக்க முடிந்தது என ஒரு ஜூனியர் வீரர் கேட்டுள்ளார். அதற்கு அவர், “நாம் ஆரம்பத்தில் கிரிக்கெட்டை கற்றுக்கொள்ளும் போது எப்போது நமக்கு பேட்டிங் வரும் என காத்துக்கொண்டிருப்போம். அப்போது உடனே நாம் அவுட்டாகிவிட்டால் இன்னும் சிறிது நேரம் நின்று விளையாடியிருக்கலாமே என தோன்றும். மேலும் சிலரிடம் எனக்கு கூடுதலாக பந்துகளை வீசுங்களேன் என கேட்டுக்கேட்டு பேட்டிங் செய்துகொண்டிருப்போம். நமக்கு அப்போது இருந்த ஆர்வம் ஏன் இப்போது இருப்பதில்லை” என ஜூனியர் வீரரிடம் பதில் கேள்வி எழுப்பியுள்ளார் டிராவிட். இதன்மூலம் அவர் களத்தில் இருப்பதை எவ்வளவு விரும்பியுள்ளார் என்பது எல்லோருக்கும் புரியும்.
பேட்டிங் செய்வதை தியானம் செய்வது போல் விளையாடிய ராகுல் டிராவிட்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக நேரம் பேட்டிங் செய்த ஒரே வீரர். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நிமிடங்கள் களத்தில் செலவழித்ததற்கான உலக சாதனையை டிராவிட் தன்வசம் வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. டிராவிட் மொத்தமாக 44,152 நிமிடங்கள் களத்தில் பேட்டிங் செய்தார். இது சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிகம்.
ராகுல் டிராவிட் விக்கெட் கீப்பராக மாறுவதற்கு முன்பாக சிறந்த ஸ்லிப் ஃபீல்டராக உலக கிரிக்கெட்டில் முத்திரை பதித்தவர். உலகத்தின் சிறந்த ஸ்லிப் ஃபீல்டராக இருந்த அவர், பல அசாதாரணமான கேட்ச்களை அள்ளி பக்கெட்டில் போட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த ஒரே வீரராக 210 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார் டிராவிட். அவருக்கு அடுத்த இடத்தில் 205 கேட்சுகளுடன் மஹிலா ஜெயவர்த்தனேவும், 200 கேட்சுகளுடன் ஜாக் காலிஸ்ஸும் உள்ளனர்.
டிராவிட் இடம் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் தனக்கான ரன்களை சேர்ப்பதை விட, மற்றவர்களின் வெற்றிக்கும் சிறப்பான பங்களித்தார். இந்த பேட்டிங் மந்திரவாதி நீண்ட பேட்டிங் பார்ட்னர்ஷிப்களை உருவாக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 100 பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி தனித்துவமான உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
டிராவிட் மிக நீண்ட வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை உருவாக்கிய 88 பார்ட்னர்ஷிப்களை பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் 80 பார்ட்னர்ஷிப்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார்.
உலக கிரிக்கெட்டில் அதிகமுறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியவர் என்ற இமாலய சாதனையை டிராவிட் வைத்துள்ளார். 6 முறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை வைத்திருக்கும் அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில்தான் டான் பிராட்மேன் மற்றும் கிரீம் ஸ்மித் முதலிய ஜாம்பவான் வீரர்கள் 5 முறை பதிவுசெய்துள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன் இணைந்து 1999 உலகக் கோப்பை போட்டியின் போது, இலங்கைக்கு எதிராக இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்தபோது டிராவிட் இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்த 300 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் ஒருநாள் போட்டிகளில் முதல்முறையாக பதிவுசெய்யப்பட்ட முச்சதமாகும்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து ஃபார்மேட்டிலும் டக் அவுட் ஆகாமல் அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே. 2000-2004 காலகட்டங்களில் 173 போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகமல் இந்த சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் 136 இன்னிங்ஸ்களுடன் சச்சின் டெண்டுலரும், 135 இன்னிங்ஸ்களுடன் அலெக் ஸ்டீவர்ட்டும் இருக்கின்றனர்.