2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றிய தொடர் இது!
போட்டி 1: இங்கிலாந்து vs நியூசிலாந்து
ஆட்ட நாயகன்: ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)
பேட்டிங்: 96 பந்துகளில் 123 ரன்கள். 11 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்
பௌலிங்: 10 - 0 - 76 - 1
இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே பேட்டோடு களமிறங்கினார் ரச்சின் ரவீந்திரா. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில், மாபெரும் தொடரில், உலக சாம்பியனுக்கு எதிராக, அதுவும் 292 என்ற கடினமான இலக்கை சேஸ் செய்யும்போது களமிறங்கினார் அவர்.
23 வயது இளம் ரவீந்திராவுக்கு இதுதான் 13வது ஒருநாள் போட்டி. பேட்டிங்கோடு சுழற்பந்துவீச்சும் செய்வார் என்பதால், இந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கிறது என்பதால் தான் நியூசிலாந்து ஸ்குவாடில் அவருக்கு இடம் கிடைத்தது. காயம் காரணமாக முதல் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடாததால் அவருக்கு பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அவர்.
களமிறங்கிய முதல் 5 பந்துகளும் மிகவும் நிதானமாக கையாண்டார் ரவீந்திரா. சாம் கரணின் அந்த ஐந்து பந்துகளிலுமே டாட் ஆடினார். ஆனால் வோக்ஸ் வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதலிரு பந்துகளையும் பௌண்டரிக்கு விரட்டினார். வோக்ஸ் வீசிய அடுத்த இரு ஓவர்களிலும் இரண்டு பௌண்டரிகள் அடித்தார் அவர்.
இப்படித்தான் தன் இன்னிங்ஸை கட்டமைத்தார் அவர். சரியான பந்துளைத் தேர்ந்தெடுத்து பௌண்டரிகள் விளாசிய அவர், நல்ல பந்துகளை மதித்து ஆடினார். டெவன் கான்வே ஒருபக்கம் நிதானமாக விளையாடிக்கொண்டிருக்க, இவர் அதிரடியைக் கையில் எடுத்தார். சாம் கரண், மார்க் வுட் ஓவர்களிலும் பௌண்டரிகள் பறந்தன. வுட் வீசிய ஏழாவது ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸரும், ஃபோருமாக அடித்து மிரட்டினார் அவர்.
வேகப்பந்துவீச்சாளர்களை அவர் அடித்து நொறுக்குகிறார் என ஸ்பின்னர் மொயீன் அலியை பந்துவீச அழைத்தார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர். அவரையும் ரவீந்திரா விட்டுவைக்கவில்லை. மூன்றாவது பந்தே சிக்ஸருக்குப் பறந்தது. மொயீன் அலியின் அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் விளாசி அரைசதத்தை நிறைவு செய்தார் ரவீந்திரா. 36 பந்துகளில் தன் முதல் உலகக் கோப்பை போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார் அவர். அதன்பின்னும் அவரது ஆட்டம் தொடரவே செய்தது. எப்படியும் ஏழெட்டு பந்துகளுக்கு ஒருமுறை ஒரு பௌண்டரி அடித்த அவர், மற்ற பந்துகளிலும் ரன் சேர்க்கவே செய்தார். அதனால் சீராக ரன் சேர்ந்துகொண்டே இருந்தது.
இந்தப் போட்டியில் என்னவோ அவர் வில்லியம்சனுக்குப் பதிலாகத்தான் களமிறங்கினார். ஆனால் அந்த இடமே தன்னுடையது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அநாயசமாக விளையாடினார் அவர். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய அவர், மிடில் ஓவர்களில் மிகவும் முதிர்ச்சியாக விளையாடினார். டெவன் கான்வே அதிரடி காட்டத் தொடங்கியதும் அவருக்கு நன்கு துணை கொடுக்கும் விதமாக தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டார் ரவீந்திரா. அதனால் அந்த பார்ட்னர்ஷிப் மிக விரைவாக ஆட்டத்தை இங்கிலாந்தின் பிடியில் இருந்து எடுத்து வந்தது.
மிகவும் சிறப்பாக விளையாடிய அவர் 82 பந்துகளில் தன் முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். சதமடைந்த பிறகும் அதே வேகத்தோடு விளையாடிய ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 36.2 ஓவர்களிலேயே 292 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்து 9 விக்கெட்டுகளில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து.
பேட்டிங்கில் மட்டுமல்ல, ரவீந்திரா பந்துவீச்சிலும் தன் பங்களிப்பைக் கொடுத்தார். 10 ஓவர்களில் அவர் 76 ரன்கள் கொடுத்திருந்தாலும் அதிரடி வீரர் ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் வீசிய ஓவரை ஹேரி ப்ரூக் அதிரடியாக ஆடினார். அடுத்தடுத்து 2 ஃபோர்களும் ஒரு சிக்ஸரும் விளாசினார் ப்ரூக். அரௌண்ட் தி ஸ்டம்ப் வந்து பந்துவீசிய அவர் குட் லென்த்தில் பிட்ச் செய்து நான்காவது ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து அந்தப் பந்துகளை வீசினார். பந்தும் பெரிதாக சுழலாலதால் அதை மிகவும் சிறப்பாகக் கையாண்டு மிட்விக்கெட் திசையிலேயே அந்த 3 பௌண்டரிகளையும் அடித்தார் அவர். ஆனால் அசராத ரவீந்திரா அடுத்த பந்தில் ஒரு சிறு மாற்றம் செய்தார். முந்தைய பந்துகளை விட கொஞ்சம் ஃபுல்லாக வீசியதோடு பந்தை சற்று சுழலச் செய்தார். முந்தைய பந்துகளைப் போலத்தான் இதுவும் என்று நினைத்து அதேபோல் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடித்தார் ப்ரூக். ஆனால் நன்கு அதை அவர் டைமிங் செய்யாததால் கான்வே கையில் அது கேட்சானது.
டெவன் கான்வே152 ரன்கள் விளாசியிருந்தாலும், பேட்டிங், பௌலிங் என இரண்டு ஏரியாவிலும் பங்களித்ததாலும் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டி இங்கிலாந்து பௌலர்களை நிலைகுலையச் செய்ததாலும் ரவீந்திரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
"சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்களை நம்பவே முடிவதில்லை. ஆனால் இப்படியொரு நாள் அமைந்தது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது. எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் டெவன் கான்வே உடன் இருந்தது எனக்கு அதிரஷ்டமாக அமைந்த்தது. நான் கான்வேவுடன் நிறைய விளையாடியிருக்கிறேன். நாங்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவரோடு நிறைய பேசினேன். அதனால் சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். களத்தில் இப்படியொரு ஆட்டத்தை ஆடுவது அட்டகாசமான விஷயம். நான்கைந்து வருடங்களுக்கு முன்பே கான்வே எப்படிப்பட்ட வீரராக உருவெடுப்பார் என்று நன்கு தெரிந்திருக்கும். இந்த ஆடுகளமும் மிகச் சிறப்பாக இருந்தது. நாங்கள் பயிற்சி போட்டியில் விளையாடிய ஹைதராபாத் ஆடுகளத்தைப் போல பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது"
ரச்சின் ரவீந்திரா