2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான வீரர்களைத் தேர்வு செய்யும் பணியில் உலகக்கோப்பைக்குத் தேர்வான அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் உலகக்கோப்பைக்கான அணியில் தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக அஸ்வினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”இதுபோன்ற எண்ணங்களுக்கு மனதளவில் இடம்கொடுக்க வேண்டாம் என்று நீண்டகாலத்திற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். மேலும், அணியைத் தேர்ந்தெடுப்பது எனது வேலை அல்ல என்பதால் அதில் கவனம் செலுத்துவதில்லை. பொதுவாக எந்த ஒரு வேலையையும் முடிக்காமல் வைத்திருப்பதில் நம்பிக்கை இல்லை. நான் அணியில் இல்லாவிட்டாலும், இந்தியா மீண்டும் ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதைப் பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன்” என்றவரிடம், ”கடந்த காலத்தில் ஓய்வுபெற நினைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “நீங்கள் இரண்டு விஷயங்களை இணைக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். காயம் காரணமாக நான் ஓய்வு பெறுவதைக் கருத்தில் கொள்ளவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் என் கிரிக்கெட் வாழ்க்கையை சுற்றி சில நிச்சயமற்ற தன்மை இருந்தது. அதனால் நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போது, நான் நன்றாக பந்து வீசுவதாகவும், பேட்டிங் செய்வதாகவும் உணர்கிறேன். இன்னும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அடுத்து தென்னாப்பிரிக்க தொடரில் எனது கவனம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.