முடிவு: 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி (தென்னாப்பிரிக்கா - 311/7; ஆஸ்திரேலியா - 177 ஆல் அவுட், 40.2 ஓவர்கள்)
பேட்டிங்: 106 பந்துகளில் 109 ரன்கள் (8 ஃபோர்கள், 5 சிக்ஸர்கள்)
ஃபீல்டிங்: 2 கேட்ச்கள்
டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தபோது, "இந்த புதிய ஆடுகளம் எப்படி இருக்கும் என்று உறுதியாக சொல்லிட முடியாது" என்று கூறினார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். அதற்கு முன் ஆடுகளம் பற்றி பிட்ச் ரிப்போர்டில் பேசியிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன், "தொடக்கத்தில் பந்து கொஞ்சம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம்" என்று கூறினார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு லக்னோ ஆடுகளங்கள் மொத்தமாக புதிதாக மாற்றப்பட்டன. அதனால் நன்கு பரிட்சயமில்லாத ஒரு ஆடுகளத்தில் எந்த அணியும் முதலில் பேட்டிங் செய்ய தயங்கவே செய்யும். அப்படியொரு ஆடுகளத்தில்தான் முதல் ஆளாகக் களம் கண்டார் குவின்டன் டி காக்.
முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக அவர் சதமடித்திருந்தாலும், வேன் டெர் டுசன், மார்க்ரம் ஆகியோரின் சதங்கள், ஹைதராபாத் ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றால் அது பெரிதாகக் கொண்டாடப்படவில்லை. ஆனால் இந்தப் புரியாத புதிர் ஆடுகளத்தில் தன் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் டி காக்.
இந்திய அணிக்கு எதிராக தொடங்கியதைப் போலவே அதிக நம்பிக்கையோடு ஆட்டத்தைத் தொடங்கினார்கள் ஆஸ்திரேலிய பௌலர்கள். அதனால் மிகவும் நிதானமாக தன் இன்னிங்ஸைத் தொடங்கினார் டி காக். நான்காவது ஓவரில் ஒரு டாப் எட்ஜ் மூலம் அவருக்கு முதல் பௌண்டரி கிடைத்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ஸ்டார்க்கை டார்கெட் செய்து ஸ்கொயர் லிக் திசையில் சிக்ஸர் விளாசினார்.
அதன்பிறகு தென்னாப்பிரிக்காவின் ரன் ரேட் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. சீரான இடைவெளியில் தொடர்ந்து பௌண்டரிகள் விளாசத் தொடங்கினார் டி காக். கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் ஓவர்களிலும் பௌண்டரிகள் விளாசிய அவர், மேக்ஸ்வெல் பந்துவீச்சை மிகவும் கவனமாக எதிர்கொண்டார். 16வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தில் சிங்கிள் அடித்து அரைசதம் கடந்தார் அவர்.
அதன்பிறகு இன்னும் அவர் ஆட்டம் வேகமெடுத்தது. ஜாம்பா வீசிய அடுத்த ஓவரிலேயே அடுத்தடுத்து 2 பௌண்டரிகள் அடித்தார் அவர். என்னதான் பௌண்டரிகள் அடித்தாலும், சிறப்பாக ஸ்டிரைக் ரொடேட் செய்து ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டார். பவுமா அவுட்டான பிறகு ரன்ரேட் சற்று குறைந்திருந்தாலும், ஹேசில்வுட் வீசிய 23வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசினார் அவர். ஃபுல் லென்த்தில் வீசப்பட்ட பந்துகளை பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் ஒரேபோல் எல்லைக்கு வெளியே அனுப்பினார் அவர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 30வது ஓவரில் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் அடித்து தன் சதத்தை நிறைவு செய்தார். அந்த சதம் 90 பந்துகளில் வந்தது. கடந்த போட்டியைப் போலவே சதமடித்த சில நிமிடங்களிலேயே இந்த முறையும் நடையைக் கட்டினார் அவர். மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவர் போல்டாகி வெளியேறியபோது அணியின் ரன்ரேட் சுமார் 5.6 என நல்ல நிலையில் இருந்தது. அந்த அளவுக்கு அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து வெளியேறியிருந்தார் டி காக்.
"இது எங்கள் அணியினருக்கு மிகப் பெரிய வெற்றி. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு எந்தத் தெளிவும் இருக்கவில்லை. ஆனால் ஓரளவு அதை நன்றாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். களத்தில் ஓரளவு நேரம் எடுத்துக்கொண்ட வீரர்கள் அதன்பிறகு அதை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஸ்கோர் செய்துவிட்டார்கள். இந்த ஆடுகளத்துக்கு 311 என்பது நிச்சயம் பெரிய ஸ்கோர்தான். நான் லக்னோ அணிக்காக இங்கு ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறேன். இங்கு இரண்டாவதாக பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும்.
ஆடுகளம் கொஞ்சம் மாறிவிடும். கடும் வெயில் வீரர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால் அந்த நிலையிலும் எங்கள் பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஒரு தவறான பந்துகூட வீசாமல் சீக்கிரமாக விக்கெட்டுகள் வீழ்த்தத் தொடங்கினார்கள். நாங்கள் எங்களை மேலும் முன்னேற்றிக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் 2 போட்டிகள்தான் ஆகியிருக்கின்றன. ஆனால் இந்த உலகக் கோப்பை மிகப் பெரிய தொடர். போட்டிகள் வேகமாக வந்துகொண்டே இருக்கும். நாங்கள் ஒவ்வொரு போட்டியாக அனுகவே விரும்புகிறோம்" - குவின்டன் டி காக்.