“இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், இரண்டாவது இந்திய சுவர்” என்றெல்லாம் பெயரிடப்பட்டு இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்டவர் சட்டீஸ்வர் புஜார். ஆனால் அப்படியிருந்த ஒரு வீரரை 2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தது பிசிசிஐ. இறுதிப்போட்டியில் அனைத்து இந்திய வீரர்களும் சோபிக்காத நிலையில், புஜாராவை மட்டும் எதற்காக நீக்குகிறீர்கள் என சுனில் கவாஸ்கர் உட்பட பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் புஜாராவை நீக்குவதில் திடமாக இருந்த இந்திய நிர்வாகம், புஜாராவை நீக்கி அவருக்கு மாற்று வீரராக சுப்மன் கில்லை களமிறக்கியது. 3வது நிலை வீரராக விளையாடிவரும் சுப்மன் கில், புஜாராவின் இடத்தை முழுமை செய்துவிட்டாரா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில்தான் ரஞ்சிக்கோப்பை போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 243 ரன்களை குவித்து அசத்தியிருக்கும் புஜாரா, ஒரு வரலாற்று இரட்டை சதம் மூலம் இந்திய நிர்வாகத்தின் முடிவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 30 பவுண்டரிகளுடன் 243 ரன்களை குவித்திருக்கும் புஜாரா சவுராஸ்டிரா அணியின் முதல் வெற்றியை உறுதிசெய்துள்ளார்.
ஜனவரி 5ம் தேதி தொடங்கிய சவுராஸ்டிரா-ஜார்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில், மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களை கடந்த புஜாரா, விவிஎஸ் லக்சுமனன் பதிவுசெய்திருந்த 19,730 ரன்களை கடந்து சாதனை படைத்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த புஜாரா 30 பவுண்டரிகளுடன் 243 ரன்களை பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்களை பதிவுசெய்த இந்தியர்கள் பட்டியலில், சுனில் கவாஸ்கர் (25,834 ரன்கள்), சச்சின் டெண்டுல்கர் (25,396 ரன்கள்), ராகுல் டிராவிட் (23,794 ரன்கள்) முதலிய ஜாம்பவான் வீரர்களை தொடர்ந்து, அதிக ரன்களை குவித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார் புஜாரா.
முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய 17வது இரட்டை சதத்தை பதிவுசெய்திருக்கும் புஜாரா, அதிகமுறை முதல்தர இரட்டை சதங்களை பதிவுசெய்த ஒரே இந்திய வீரராவார். இந்த பட்டியில் 17 இரட்டை சதங்களுடன் ஹெர்பர்ட் சட்க்ளிஃப் மற்றும் மார்க் ராம்பிரகாஸ் இருவருடன் சம நிலையில் இருக்கும் புஜாரா, ஒட்டுமொத்தமாக டான் பிராட்மேன் (37), வாலி ஹம்மண்ட் (36), பாட்ஸி ஹெண்ட்ரன் (22) ஆகியோருக்கு அடுத்து 4வது இடத்தில் நீடிக்கிறார்.
அதேபோல் ரஞ்சிக்கோப்பையில் 8வது இரட்டை சதத்தை பதிவுசெய்திருக்கும் புஜாரா, பராஸ் டோக்ராவுக்கு (9) பிறகு அதிகமுறை இரட்டை சதத்தை பதிவுசெய்த வீரராக மாறி அசத்தியுள்ளார்.