உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரலியாவிடம் தோல்வியடைந்த இந்திய வீரர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். ரோகித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் களத்திலேயே கண்ணீர் விட்டனர். இதையடுத்து சில நிமிடங்களில் வீரர்களின் அறைக்கே பிரதமர் மோடி சென்றார். அங்கு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் கைகளையும் பற்றி நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறிய பிரதமர், பயிற்சியாளர் டிராவிட்டை அழைத்து பாராட்டினார்.
மேலும் ஜடேஜா, கில், ஸ்ரேயஸ், பும்ரா போன்றோரை அழைத்து அவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை கூறிய பிரதமர், முகமது ஷமியின் பெயரைக் கூறி அழைத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்து சிறப்பாக ஆடியதற்காக பாராட்டினார்.
பின், ‘உங்களுக்கு குஜராத்தி தெரியுமா?’ என பும்ராவிடம் பிரதமர் கேட்டார். வீரர்கள் அனைவரையும் டெல்லி வரும்போது சந்திப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிகழ்வு ஏற்கெனவே புகைப்படமாக வெளியாகியிருந்த நிலையில் தற்போது வீடியோ காட்சிகளை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி இழந்தபோதும், சமூக வலைதளங்களில் பறந்த மீம்ஸ்கள், சோகத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது