கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர் மட்டுமில்லாமல், இந்தியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 4 முறை BGT தொடரை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-ம் ஆண்டுதான் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றிருந்தது.
2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால், சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை. இந்தமுறை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் மட்டுமில்லாமல், சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன், ஜோஷ் ஹசல்வுட் போன்ற வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் முக்கியமான தொடர் இன்னும் 10 நாட்களுக்குள் தொடங்க உள்ளதால், போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் சுத்த வேகம் மற்றும் பவுன்ஸ் சார்ந்ததாக இருக்கும் என்று மேற்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் தலைமைக் கண்காணிப்பாளர் ஐசக் மெக்டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஐசக் மேலும் கூறுகையில், தரையில் பட்டு எழும்பும் வேகத்திற்கு ஏற்றவாரு ஆடுகளத்தை உருவாக்குவதன் முக்கிய நோக்கம் கடந்த ஆண்டு காட்சிகளை மீண்டும் எடுத்துவருவதன் முயற்சியாகும். மேற்கிந்தியத் தீவுகள் தொடரின் போது பெர்த் ஆடுகளம் ஆபத்தை விளைவிக்கும் பிட்ச்சாக கருதி ஸ்கேனரின் கீழ் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது, பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் போட்டிக்கு எதிராக ஐசக் அதற்கு உயிர் கொடுத்தார்.
ESPNcricinfo பேசியிருக்கும் ஐசக் மெக்டொனால்ட், "இது ஆஸ்திரேலியா, இது பெர்த்... நல்ல வேகம், நல்ல பவுன்ஸ் மற்றும் நல்ல கேரிக்கு தகுந்தவாறு நாங்கள் ஆடுகளத்தை அமைத்துள்ளோம். சரியாக சொல்லவேண்டுமானால் கடந்த ஆண்டு இருந்ததை நான் பின்பற்ற விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பெர்த் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் பற்றி கூறினால், ஆஸ்திரேலிய பேட்டர்கள் கூட அவர்களின் சொந்த மண்ணில் வேகப்பந்துவீச்சை சமாளிக்க போராடினர். மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா போன்றவர்கள் அதிவேகமான வேகப்பந்துவீச்சை பாதுகாக்கத் தவறி கடுமையான அடிகளை தங்களின் மேல் வாங்கினர்.
மேலும், பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சில் 30.2 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த ஆடுகளம் தான் நான் பேட் செய்ததில் கடினமான ஆடுகளம் என்று லபுஷனே கூறியிருந்தார்.
அந்த போட்டி குறித்து பேசிய ஐசக், “அந்த சந்தர்ப்பத்தில் ஆடுகளத்தில் பத்து மில்லிமீட்டர் புல் விடப்பட்டது. இது [10 மிமீ] ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக அமைந்தது. முதல் 3 நாட்களுக்கு ஆடுகளத்தில் இருந்த புல் பகுதிகளால் அதிகப்படியான வேகம் இருந்தது. இரண்டு பந்துவீச்சு பிரிவுகளும் கடந்த ஆண்டு மிகவும் வேகமான பந்துவீச்சை கொண்டிருந்தன. இந்த ஆண்டும் அதே போலவே இருக்கும் என்று நம்புகிறோம். ஆனால் கடந்த ஆண்டு நாம் பார்த்தது போல், நல்ல பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சை எதிர்கொண்டு விரைவாக ரன்களை எடுக்க முடிந்தது போல், இந்தாண்டும் எடுக்க முடியும்” என்று மெக்டொனால்ட் மேலும் கூறினார்.
ஐசக் கூறுவதை வைத்து பார்த்தால் இந்திய அணி நல்ல வேகப்பந்துவீச்சு யூனிட்டை கொண்டிருப்பது மட்டுமில்லாமல், பேட்ஸ்மேன்களும் திறமையாக செயல்பட வேண்டியது அவசியமானதாக இருக்கும். கடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரில் புஜாரா போன்ற ஒருவீரர் உடலில் அதிகப்படியான அடிகளை வாங்கிக்கொண்டு நிலைத்து நின்றதால் இந்தியாவால் ஓரளவு டிஃபண்ட் செய்யக்கூடிய ரன்களை எடுக்க முடிந்தது.
இந்தமுறை எந்தவீரர் புஜாராவின் இடத்தை பூர்த்தி செய்யப்போகிறார் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. எப்படி இருப்பினும் இந்த தொடர் இந்தியாவிற்கு பெரிய சவாலாகவே அமையவிருக்கிறது.