நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. ராஜஸ்தான், கொல்கத்தா போன்ற அணிகள் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்ட நிலையில், லக்னோ, ஹைதராபாத், சென்னை, டெல்லி போன்ற அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற கடுமையான போட்டி நிலவுகிறது.
அதேசமயத்தில் முக்கியமான காலக்கட்டத்தில் பல்வேறு அணிகளில் வீரர்கள் காயங்களால் அவதிப்பட்டு வருவதும், வீரர்கள் வெளியேறுவதும் நடந்துவருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பதிரானா, தீபக் சாஹர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மயங்க் யாதவ் போன்றோர் காயத்தில் அவதிப்பட்டு வந்த நிலையில், மயங்க் யாதவ் தொடரில் இருந்தே வெளியேறியுள்ளார்.
சாஹரின் காயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “சாஹர் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என சொல்லமாட்டேன். ஆனால் தொடரில் விளையாடுவது சந்தேகம்” என தெரிவித்துள்ளார். சேப்பாக்கத்தில் பஞ்சாப் உடனான போட்டியின் போது சாஹர் 2 பந்துகளை மட்டுமே வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் மணிக்கு 156.6 கிமீ வேகத்தில் பந்துவீசிய லக்னோ அணியின் மயங்க் யாதவ், மும்பை அணியுடனான போட்டியின் போது abdominal muscle tear ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தொடரில் இருந்தே விலகியுள்ளார்.
மயங்க் யாதவ் லக்னோ அணிக்காக சிறப்பாக பந்துவீசி, பெங்களூரு மற்றும் பஞ்சாப்புக்கு எதிரான இரு போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருதினை வென்றார். ஆனால் அடுத்து ஆடிய குஜராத் உடனான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 4 வாரங்களுக்கு அணியில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற்றபின் கடந்த 30 ஆம் தேதி மும்பை உடனான போட்டியில் மீண்டும் களமிறங்கினார். அந்த போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடரில் இருந்தே விலகியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “மயங்க் ப்ளே ஆஃப்களில் விளையாட வேண்டும் என நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். ஆனால் நானும் ஒரு யதார்த்தவாதிதான். அவர் தொடரின் இறுதியில், மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம். அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. அவருக்கு சிறிய அளவில் தசை நார்கிழிதல் ஏற்பட்டுள்ளது. இதுமிகவும் துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார்.
பும்ராவும், வேகப்பந்து வீச்சாளர்கள் காயங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பற்றி கூறியுள்ளதாக லாங்கர் கூறினார்.
சென்னை அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பதிரானா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்று இலங்கையில் இருந்து இந்தியா வந்த நிலையில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.
டெத் ஓவர்களில் இந்திய அணியின் ஆயுதமாக இருந்த பதிரானாவிற்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, “மதீஷா பதிரானா தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் சிகிச்சைக்காக இலங்கை திரும்புகிறார். அவர் விரைவில் குணமடைய சென்னை அணி வாழ்த்துகிறது. தொடரின் இறுதியில் பதிரானா மீண்டும் அணிக்கு திரும்புவாரா என்பதை சென்னை அணியின் நிர்வாகம் ஏதும் தெரிவிக்கவில்லை.
இதுவரை 6 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் பதிரானா. முஸ்தாபிசுர் ரஹ்மான் நாடு திரும்பியுள்ள நிலையில், சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில் பதிரானாவும் நாடு திரும்பியுள்ளது சென்னை அணி இழப்பாக கருதப்படுகிறது”