போட்டி 22: ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்
மைதானம்: எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 22, மதியம் 2 மணி
ஆப்கானிஸ்தான்
போட்டிகள்: 4, வெற்றி - 1, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
புள்ளிப் பட்டியலில் இடம்: பத்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: ரஹ்மானுல்லா குர்பாஸ் - 159 ரன்கள்
சிறந்த பௌலர்: ரஷீத் கான் - 6 விக்கெட்டுகள்
50 ஓவர் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியால் டி20 போல் தாக்கம் ஏற்படுத்த முடிவதில்லை. வங்கதேசம், இந்தியா அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது அந்த அணி. ஆனால், இந்த உலகக் கோப்பையின் மிகப் பெரிய அப்செட்களுள் ஒன்றை நிகழ்த்தியது ஆப்கானிஸ்தான். நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து தங்கள் கிரிக்கெட் வரலாற்றின் மிகமுக்கிய வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக 149 ரன்களில் படுதோல்வி அடைந்து பழைய பாதைக்குத் திரும்பியிருக்கிறது.
பாகிஸ்தான்
போட்டிகள்: 4, வெற்றிகள் - 2, தோல்விகள் - 2, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 4
புள்ளிப் பட்டியலில் இடம்: ஐந்தாவது
சிறந்த பேட்ஸ்மேன்: முகமது ரிஸ்வான் - 294 ரன்கள்
சிறந்த பௌலர்: ஷஹீன் அஃப்ரிடி - 9 விக்கெட்டுகள்
நெதர்லாந்து, இலங்கை என கொஞ்சம் எளிதான போட்டிகளை வென்று இந்த உலகக் கோப்பையை தொடங்கிய பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பெரிய அணிகளிடம் அடி வாங்கியிருக்கிறது. அடுத்தடுத்து இரு தோல்விகளால் அந்த அணியின் ரன்ரேட்டும் சற்று அடி வாங்கியிருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகளில் வித்தியாசமான ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் போட்டிக்கு, இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பயன்படுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஆடுகளம் பௌலர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, முதலில் பேட்டிங் செய்திருந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகியிருந்தது.
ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையில் மிகவும் சுமாராகவே செயல்படுகிறது. எந்த வீரருமே கன்சிஸ்டென்ட்டாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 4 போட்டிகளில் அந்த அணியின் சார்பில் மொத்தமே 4 அரைசதங்கள் தான் அடிக்கப்பட்டிருக்கின்றன. ரிஸ்வான் கூட இங்கிலாந்து போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை. பந்துவீச்சிலும் அப்படியே. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் மும்மூர்த்திகளான ரஷீத் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் இணைந்து 95.3 ஓவர்களில் 12 விக்கெட்டுகளே வீழ்த்தியிருக்கிறார்கள். முகமது நபியோ வெறும் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். இப்படி நட்சத்திர வீரர்களே தடுமாறும்போது, அவர்களின் மிடில் ஆர்டரிடமும், வேகப்பந்துவீச்சாளர்களிடமும் என்ன எதிர்பார்க்க முடியும்! என்னதான் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், ஆப்கானிஸ்தான் அணியால் இந்தப் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியும். காரணம் அந்த சென்னை ஆடுகளம். அந்த அணியின் ஸ்பின்னர்களுக்கு ஏற்ற இடம். பாகிஸ்தான் அணியும் சற்று நம்பிக்கை குறைவாக இருக்கிறது. அவர்களை சந்திக்க சரியான நேரமும் இடமும் இதைவிட எதுவும் இருக்க முடியாது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் இதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
தொடர்ந்து 2 வெற்றிகளோடு தொடங்கிய பாகிஸ்தான் இப்போது அடுத்தடித்து 2 போட்டிகளைத் தோற்றிருக்கிறது. கேப்டன் பாபர் ஆசம் தடுமாறுகிறார். ஓப்பனர்கள் பெரிய தொடக்கம் கொடுக்க திணறுகிறார்கள். ஸ்பின்னர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. இப்படி பல பஞ்சாயத்துகள். அத்தனைக்கும் மத்தியில் அவர்களின் ஃபீல்டிங்கே ஒட்டுமொத்தமாக நம்பிக்கையைக் குலைத்துவிடுகிறது. கேப்டன் பாபர் ஆசமால் களத்தில் வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்க முடிவதில்லை. பேட்டிங்கிலும் சரி, களத்தில் வீரர்களை வழிநடத்துவதிலும் சரி ரிஸ்வான் தான் அணியை சுமந்துகொண்டிருக்கிறார். ஒருவகையில் சென்னை வருவது அவர்களுக்கு ஆசுவாசமாக இருக்கும். மற்ற ஊர்களில் இருந்த மோசமான சூழ்நிலை நம் ஊரில் இருக்கப்போவதில்லை. ஹைதராபாத்தில் இருந்ததுபோல் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் அன்பு மழை சென்னையில் பொழியும். ஒருவேளை அது அவர்களின் பாதையை மாற்றலாம்.
ஆப்கானிஸ்தான் - முஜீப் உர் ரஹ்மான்: இங்கிலாந்துக்கு எதிராக தாக்கம் ஏற்படுத்தியதைப் போல் இந்தப் போட்டியிலும் முஜீப் அட்டகாசப்படுத்தவேண்டும். பவர்பிளேவில் அவரால் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்த முடிந்தால் ஆப்கானிஸ்தான் இன்னொரு அப்செட் பற்றி நினைத்துப் பார்க்கலாம்.
பாகிஸ்தான் - பாபர் ஆசம்: இந்த உலகக் கோப்பையில் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் இந்தப் போட்டியிலும் சொதப்பினால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் விமர்சனத்தையும் சந்திக்க நேரிடும்.