போட்டி 22: ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்
முடிவு: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி (பாகிஸ்தான் - 282/7, ஆப்கானிஸ்தான் - 286/2, 49 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: இப்ராஹிம் ஜத்ரான் (ஆப்கானிஸ்தான்)
பேட்டிங்: 113 பந்துகளில் 87 ரன்கள் (10 ஃபோர்கள்)
சென்னை ஆடுகளத்தில், பாகிஸ்தான் போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக 282 என்ற இலக்கை சேஸ் செய்யவேண்டும். நிச்சயம் எளிதான விஷயமில்லை. அதுவும் ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு அது எந்த வகையிலும் எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி அந்த அசாத்தியத்தை நிகழ்த்திக் காட்டியது. அதுவும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதற்கு மிகமுக்கியக் காரணம் சிறப்பாக அமைந்த அஸ்திவாரம். அந்த அணியின் ஓப்பனர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் ஒரு அட்டகாசமான தொடக்கத்தை அந்த அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். அதிலும் இப்ராஹிம் ஜத்ரான் அந்த அணியின் டாப் ஸ்கோரராக விளங்கினார். குர்பாஸோடு மட்டுமல்லாமல் ரஹ்மத் ஷாவோடும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தான் அணியை சரியான பாதையில் அழைத்துச் சென்றிருந்தார் அவர்.
பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டார் பௌலரான ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சில் ஃபோர் அடித்துத்தான் தன் ரன் கணக்கைத் தொடங்கினார் ஜத்ரான். அடுத்த ஓவரை வீச வந்த ஹசன் அலியை ஒன்றுக்கு இரண்டு முறை தண்டித்தார் . பாயின்ட் திசையில் அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகள் பறந்தன. பவர்பிளேவில் ஹசன் அலி ஓவரில் மேலும் இரு ஃபோர்கள் அடித்திருந்தார் ஜத்ரான். அந்த முதல் பவர்பிளே (1-10 ஓவர்கள்) முடியும்போது 36 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தார் அவர். மிகவும் திடமாக தன் இன்னிங்ஸை அவர் கட்டமைத்திருந்தார். ஆனால் அதற்காக அவர் அதிகம் முயற்சிக்கவில்லை. ஒவ்வொரு பந்தையும் அடிக்க நினைக்கவில்லை. அடிப்பதற்கு ஏற்ற பந்துகளை தேர்வு செய்தே தன் ஷாட்களை அவர் ஆடினார். வெறும் 11 பந்துகளில் மட்டுமே அந்த ரன்களை எடுத்தார் அவர். மீதி 25 பந்துகள் அவர் டாட் ஆடினார். அந்த அளவுக்கு மிகவும் நம்பிக்கையோடு, ஒரு அனுபவ பேட்ஸ்மேனைப் போல் தன் இன்னிங்ஸை தொடங்கியிருந்தார் அவர். மறுபக்கம் குர்பாஸ் அதிரடி காட்டியதால், அவர் ரன்ரேட் பற்றி பெரிதாக கவலைப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
முதல் பவர்பிளே முடிந்து உசாமா மிர், ஹாரிஸ் ராஃப் வீசிய ஸ்பெல்லையும் மிகவும் திட்டமிட்டு கையாண்டார் அவர். உசாமா மிர் பந்துவீச்சில் தொடர்ந்து 3 ஓவர்கள் தலா 1 ஃபோர் அடித்தார் ஜத்ரான். அந்த ஸ்பெல்லில் ராஃப் பந்துவீச்சில் 11 பந்துகளுக்கு 3 ரன்கள். ஆனால் உசாமா மிர் பந்துவீச்சில் 13 பந்துகளில் 16 ரன்கள். எந்த பௌலரை எப்படி ஆடவேண்டுமென்று கணித்து ஆடிக்கொண்டிருந்தார் அவர். அந்த அளவுக்கு முதிர்ச்சியைக் காட்டிய அந்த 21 வயது வீரர் 54 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இந்த பார்ட்னர்ஷிப் பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாய் இருந்தது. ஃபோர்கள் அடிக்காதபோது சிறப்பாக ஓடி இவர்கள் ரன் சேர்த்தனர். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்க, சிங்கிளை டபுளாக்கினார்கள். பாகிஸ்தானின் ஃபீல்டிங் வழக்கம்போல் வேற லெவலில் இருக்க, அதைப் பயன்படுத்திக்கொண்டு மேலும் ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது அந்த இணை!
22வது ஓவரில் குர்பாஸ் ஆட்டமிழந்து வெளியேறியபோது எங்கே அணி சரிந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியது. ஆனால் தன் நிதானமான ஆட்டத்தால் ஆப்கன் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார் ஜத்ரான். குர்பாஸ் அவுட் ஆன அடுத்த ஓவரிலேயே ஒரு ஃபோர் அடித்தார். அதன்பிறகு சீராக ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தார். மூன்றாவது வீரராகக் களம் கண்ட ரஹ்மத் ஷாவும் 1, 2 என தொடர்ந்து எடுக்க, இன்னொரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவானது. அந்த இணை 12.2 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஜத்ரான் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஹசன் அலி பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்தார் அவர்.
ஆரம்பம் முதலே மிகச் சரியாக திட்டமிட்டு, அதை செயல்படுத்தவும் செய்து, இரண்டு அற்புதமான பார்ட்னர்ஷிப்களையும் அமைத்த அவருக்கு இந்த ஆட்ட நாயகன் விருது மகுடத்தின் மீது பதிக்கப்பட்ட முத்தைப் போன்றது!
"இந்தத் தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். நான் பாசிடிவான மன நிலையோடும், பாசிடிவான இன்டென்ட்டோடும் விளையாடவேண்டும் என்று நினைத்தேன். அதை நல்லபடியாக செய்தேன். நானும் குர்பாஸும் ஒருவரோடு ஒருவர் நிறைய கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அண்டர் 16 நாள்களில் இருந்தே நாங்கள் விக்கெட்டுகளுக்கு இடையே சிறப்பாக ஓடுவோம். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பின்போது குர்பாஸ் என்னை ஊக்குவித்த விதம் அற்புதமானது. அது எனக்கு பெரிய அளவில் உதவியது. நாங்கள் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டுவரவும் உதவியது. எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என் நாட்டை நினைத்து இன்னும் மகிழ்ச்சியடைகிறேன்"
இப்ராஹிம் ஜத்ரான்