13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் புள்ளிப் பட்டியலில் இடம்பிடிக்க போட்டிபோட்டு விளையாடி வருகின்றன. இந்த நிலையில், இந்திய அணி, தாம் சந்தித்த 4 போட்டிகளிலும் வெற்றிபெற்று வீறுநடை போட்டு வருவதுடன், புள்ளிப் பட்டியலிலும் 2வது இடத்தில் உள்ளது. நேற்று (அக்.19) புனேயில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ’வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவை தோற்கடித்தால் அவ்வணி வீரர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடலாம்’ என பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இது, இணையத்தில் வைரலாகியதுடன், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வங்கதேச அணி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, நடிகை சேகர் ஷின்வாரியின் எக்ஸ் வலைதளப்பதிவை டேக் செய்து மீண்டும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டனர்.
இந்தச் சூழலில், அவர் மீண்டும் ஒரு பதிவை எக்ஸ் தளத்தில் வேறொரு பதிவை இட்டுள்ளார். அதில் அவர், “நான் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை போட்டியில் நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தும்” எனப் பதிவிட்டுள்ளார். இவர், எப்போதும் இந்திய அணி தோல்வியுற வேண்டும் என்பதாகவே பதிவிட்டு வருகிறார். அதனாலேயே இந்திய ரசிகர்களிடமும் ட்விட்டர் பயனர்களிடம் அதிகளவில் விமர்சனங்களைப் பெறுகிறார்.
கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின்போது, இவர்தான் “இந்தியா தோல்வியடைய வேண்டும்” என ட்வீட் செய்திருந்ததுடன், “ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், 'ஜிம்பாப்வே பையனை' திருமணம் செய்துகொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது.