பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்றுமுதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச பவுலர்கள், முதல் 8 ஓவருக்குள் 16 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தனர். தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபீக் 2 ரன்னிலும், கேப்டன் ஷான் மசூத் 6 ரன்னிலும், நட்சத்திர வீரர் பாபர் அசாம் 0 ரன்னிலும் வெளியேற பாகிஸ்தான் அணி தடுமாறியது.
கடினமான நேரத்தில் களமிறங்கிய சாத் ஷகீல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்த, மறுமுனையில் பவுண்டரி, சிக்சர் என விளாசிய சைம் ஆயூப் அரைசதமடித்து அசத்தினார். ஆனால் சைமும் 56 ரன்னில் வெளியேற 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி.
ஆனால் 5வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சாத் ஷகீல் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரிகள், சிக்சர்கள் என விளாசிய இந்த ஜோடி வங்கதேச பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஷகீல் மற்றும் ரிஸ்வான் இருவரும் அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்து அசத்தினர்.
5வது விக்கெட்டுக்கு 240 ரன்களை சேர்த்த இந்த ஜோடி மிரட்டியது. விக்கெட்டை தேடித்தேடி சலித்துப்போன வங்கதேச பவுலர்களுக்கு, சாத் ஷகீல் தன்னுடைய விக்கெட்டை தானாகவே கிஃப்ட் செய்து 141 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய முகமது ரிஸ்வான் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 171 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். 6 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி இன்னிங்ஸை டிக்ளார் செய்தது. தற்போது வங்கதேச அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிவருகிறது.
சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு 5வது விக்கெட்டுக்கு 240 ரன்களை குவித்த சாத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி, 1976-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் 5வது விக்கெட்டுக்கு இரண்டாவது அதிகபட்ச ரன்களை குவித்து அசத்தியுள்ளது. 1976-ம் ஆண்டு ஜாவேத் மியான்தத் மற்றும் ஆசிப் இக்பால் இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 281 ரன்களை குவித்திருந்தனர்.
அதுமட்டுமில்லாமல் 2009-ம் ஆண்டுக்குபிறகு ஒரு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்களை கடப்பது இதுவே முதல்முறை. அந்த சாதனையை முகமது ரிஸ்வான் படைத்து அசத்தியுள்ளார்.