பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அதில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பாகிஸ்தான், இந்தியாவிடமும் வெற்றியை பறிகொடுத்துள்ளது.
இதையடுத்து அந்த அணி மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பாகிஸ்தான் அணியை பற்றி ஒரு வி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அதில்,”பாகிஸ்தான் அணியில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்தால் போதும் என முதலில் நினைத்தேன்.ஆனால், தற்போதுள்ள நிலையை பார்த்தால் மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. அணியில் இடம் பிடிக்க நீண்ட நாட்களாக காத்திருப்பவர்கள் குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது.” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பேச்சின் மூலம் அந்த அணியில் முன்னணி வீரர்கள் பலர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் 2 போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் அடுத்து அயர்லாந்திடமும் கனடாவிடமும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது.