ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது முதலில் நடைபெற்ற நிலையில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தொடர் 1-1 என சமன்பெற்றது.
இந்நிலையில் தொடர் வெற்றி யாருக்கு என்பதை உறுதிசெய்யும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலியாவை 140 ரன்னில் சுருட்டிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் 2002-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தோல்வி மற்றும் பாகிஸ்தானின் வெற்றிகுறித்து பேசியிருக்கும் பாகிஸ்தானின் கோச் கில்லெஸ்பி, ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானின் ஒருநாள் தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்காததை சுட்டிக்காட்டினார்.
டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், முன்னாள் ஆஸ்திரேலியா பவுலர் கில்லெஸ்பி பாகிஸ்தான் அணியை இந்த தொடரில் வழிநடத்தினார்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வெற்றிகுறித்து பேசியிருக்கும் கில்லெஸ்பி, “உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெரிகிறது. அவர்கள் இந்தியாவிற்கு எதிரான BGT தொடரை விளம்பரப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை விளம்பரப்படுத்துவதை நான் எங்கும் பார்க்கவில்லை, இது சற்று ஆச்சரியமாக இருந்தது.
அவர்கள் எந்த தொடருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பது அவர்களுடைய தேர்வு. ஆனால் நாங்கள் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இந்த தோல்விக்கு பிறகு அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான திட்டங்களோடு வருவார்கள் என நினைக்கிறேன். நாங்கள் வலுவான ஆஸ்திரேலியா அணியையும் தோற்கடித்த தயாராக இருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ம் தேதி தொடங்கவிருக்கிறது.