2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. அகமதாபாத், சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, தர்மசாலா, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, புனே என மொத்தம் 10 நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் இறுதிப்போட்டியை சேர்த்து 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், போட்டி நடைபெறும் நகரங்களில் இருக்கும் தங்கும் விடுதிகள் அதன் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ரைவல்ரி போட்டிக்கான நாளில், அகமதாபாத்தில் அதிகப்படியான கட்டணங்கள் கூறப்படுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹாஸ்பிட்டாலிட்டி டெக்னாலஜி தளங்களானது, தங்கும் வசதிக்கான தங்களது ஆஃபர்களை அறிவித்துவருகின்றன. அந்த வகையில் OYO-ம் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், ஹோட்டல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது OYO. பயணம் மற்றும் தங்கும் விடுதிக்கான நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வருவாயை வலுப்படுத்துவதற்காக ஆர்வம் காட்டும் நிலையில், உலகக் கோப்பையை பார்க்கவரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வசதியான மற்றும் மலிவான தங்குமிடத்தை வழங்கி சிறப்பான அனுபவத்தை ஏற்படுத்தி தருவதே இதன் முக்கிய நோக்கம் என்று OYO தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியிருக்கும் OYO செய்தித் தொடர்பாளர், “கிரிக்கெட் உலகக் கோப்பையை பார்க்கவரும் ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அடுத்த மூன்று மாதங்களுக்கு போட்டி நடைபெறும் நகரங்களில் கூடுதலாக 500 ஹோட்டல்களை சேர்க்கிறது, OYO. தங்களுக்குப் பிடித்த அணிகளைப் பார்ப்பதற்காக தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் அனைவருக்கும் வசதியான மற்றும் குறைந்த கட்டணத்தில் தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்” என்று OYO செய்தித் தொடர்பாளர் எகனாமிக் டைம்ஸிடம் கூறியுள்ளார்.
OYO-ஐ போலவே, ஆன்லைன் பயண சேவை தளமான MakeMyTrip-ம் போட்டியின் போது வசதியாக தங்குவதற்கு ரசிகர்களை அழைத்துள்ளது. அனைவருக்கும் பொருத்தமான விதத்தில் தங்குமிட விருப்பத்தைக் கண்டறிய உதவும் வகையில், நகரத்தில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திலிருந்து தங்கும் இடத்தின் தூரத்தைப் பிரதிபலிக்கும் புதிய அம்சத்தையும் அந்நிறுவனம் சேர்த்துள்ளது.
இதுகுறித்து பேசியிருக்கும் MakeMyTrip தலைமை வணிக அதிகாரி, “நாடு முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு தங்கும் இடத்தை தேடுவதில் குறிப்பிடத்தக்க எழுச்சியை நாங்கள் கவனித்துள்ளோம். இது ஒரு நல்ல அறிகுறியாகும். இது தங்களுக்கு வசதியான தங்கும் இடங்களை ஆராய்வதற்கு முன்னெப்போதையும் விட மக்கள் அதிக விருப்பத்துடன் இருப்பதைக் குறிக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் குறைந்த கட்டணத்தில் தங்கக்கூடிய நிறைய விடுதிகள் மைதானங்களை சுற்றி இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.