2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.
உலகக் கோப்பை வரலாற்றில் பல அப்செட் வெற்றிகள் அரங்கேற்றியிருக்கிறது. அதில் மிகவும் முக்கியமானது, மறக்க முடியாதது 2011 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது!
இங்கிலாந்து vs அயர்லாந்து போட்டி என்பது இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்துக்கு இணையானது. அந்த இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனைகளின் காரணமாக அந்த இரு அணிகளுக்கும் இடையே எந்த விளையாட்டுப் போட்டி நடந்தாலும் அங்கு உஷ்னமாகவே இருக்கும். அப்படித்தான் 2011 உலகக் கோப்பையில் அந்த இரு அணிகளும் மோதிய போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
பெங்களூருவில் நடந்த அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூ ஸ்டிராஸ் பேட்டிங் தேர்வு செய்தார். சின்னசாமி மைதானத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும், ரன் மழை அன்று பொழிந்தது. ஸ்டிராஸோடு இணைந்து கெவின் பீட்டர்சன் ஓப்பனராகக் களமிறங்கினார். இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். 81 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தது அந்தக் கூட்டணி. முதல் விக்கெட்டாக கேப்டன் வெளியேற, அவர் அவுட்டான சில ஓவர்களிலேயே அரைசதம் அடித்திருந்த பீட்டர்சனும் அவுட் ஆனார். ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோனதன் டிராட், இயான் பெல் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். மூன்றாவது விக்கெட்டுக்கு அந்தக் கூட்டணி 167 ரன்கள் எடுத்தது. இயான் பெல் 81 ரன்களில் அவுட்டாக, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிராட் 92 ரன்களில் வெளியேறினார்.
அவர்கள் இருவரும் அவுட்டான பிறகு வேறு எந்த பேட்ஸ்மேனும் சரியாக விளையாடாத காரணத்தால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. எதிர்த்து விளையாடியது அயர்லாந்து என்பதால், இங்கிலாந்து நிச்சயம் வென்றுவிடும் என்று தான் எல்லோருமே நினைத்திருந்தார்கள். அதற்கு ஏற்றதுபோல் முதல் பந்திலேயே கேப்டன் வில்லியம் போர்ட்டர்ஃபீல்டை இழந்தது அயர்லாந்து அணி. ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார் போர்ட்டர்ஃபீல்ட். பால் ஸ்டிர்லிங் சற்று அதிரடி காட்டினாலும் 32 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய எட் ஜாய்ஸ், நியால் ஓ பிரயன் இருவரும் நிதானமாக விளையாடினார்கள். சொல்லப்போனால் மிகவும் நிதானமாக விளையாடினார்கள்.
அயர்லாந்து அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தபோது 111 ரன்களே எடுத்திருந்தது. 154 பந்துகளில் 217 ரன்கள் தேவை என்ற மிகமோசமான நிலையில் இருந்தது அந்த அணி. ஆனால் கெவின் ஓ பிரயன் வேறு திட்டத்தோடு வந்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் அயர்லாந்தின் ஃபிளின்டாஃப் என்று வர்ணிக்கப்பட்டிருந்த அவர், அந்த இங்கிலாந்து ஜாம்பவான் போலவே ஒரு மிரட்டலான இன்னிங்ஸ் ஆடினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே பௌண்டரி அடித்தவர், ஸ்பின்னர்கள் மைக்கேல் யார்டி, கிரீம் ஸ்வான் இருவர் பந்துவீச்சிலும் ஃபோரும் சிக்ஸருமாக அடித்து தன் அதிரடியை தொடங்கினார். ஆனால் அவர்களை மட்டும் அவர் டார்கெட் செய்யவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவார்ட் பிராட், டிம் பிரெஸ்னன் என முன்னணி வேகப்பந்ததுவீச்சாளர்களையும் பதம் பார்த்தார் அவர்.
30 பந்துகளில் அரைசதம் அடித்த கெவின் ஓ பிரயன், அதன்பிறகு இன்னும் விஸ்வரூபம் எடுத்தார். அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் சேர்க்க, தன் ஐம்பதாவது பந்தில் 100 ரன்களைக் கடந்தார். ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று அவரைக் கொண்டாடினார்கள். அவர் சதமடித்த பிறகு அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 56 பந்துகளில் 56 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதனால் தன் அணுகுமுறையை மாற்றினார் கெவின் ஓ பிரயன். நிதானமாக விளையாடி அணியைக் கரைசேர்க்க நினைத்தார். ஆனால் பொறுமை அவருக்கு உதவவில்லை. 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த அவர் ரன் அவுட் ஆனார். இருந்தாலும் அலெக்ஸ் கூசக், ஜான் மூனி இருவரும் அவருக்கு கம்பெனி கொடுத்ததால், ஐந்து பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது அயர்லாந்து.
இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு உலகக் கோப்பையையே வென்றது போன்ற உணர்வைக் கொடுத்தது. வீரர்கள் மைதானத்தில் வெற்றிக் களிப்போடு சுற்றிவர, ரசிகர்கள் அதைக் கொண்டாடித் தீர்த்தார்கள். இங்கிலாந்து அணியை வென்றது ஒரு கொண்டாட்டம் என்றால், 327 ரன்களை சேஸ் செய்தது இன்னொரு கொண்டாட்டம். அந்த அணிக்கு அவை இரண்டுமே ஒரே நாளில், அதுவும் உலகக் கோப்பை எனும் மேடையில் அரங்கேறியது. இன்னும் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிகச் சிறந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.