2023ம் ஆண்டு நிறைவுபெற்ற நிலையில் ஆண்டின் சிறந்த டி20, ODI மற்றும் டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவித்து வருகிறது. அதன்படி ஐசிசி அறிவித்த சிறந்த டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா இருவரும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
ஐசிசியின் சிறந்த டி20 அணியில், சூர்யகுமார் யாதவுடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஸ்னோய் மற்றும் அர்ஸ்தீப் சிங் முதலிய இளம் வீரர்கள் தங்களுடைய இடங்களை சீல் செய்து அசத்தியுள்ளனர்.
ICC சிறந்த T20I அணி 2023: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சிக்கந்தர் ராசா, மார்க் சாப்மேன், அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடேர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் நகரவா, அர்ஷ்தீப் சிங்.
2023ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ODI அணியை பொறுத்தவரையில், அதிகப்படியான இந்திய வீரர்கள் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம்பெற்ற நிலையில், சுப்மன் கில், விராட் கோலி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி முதலிய 6 வீரர்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். சிறந்த ஒருநாள் அணியாக வலம்வந்த இந்திய அணிக்கு 2023 ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் எட்டாக்கனியாக மாறியது.
ICC சிறந்த ODI அணி 2023: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டேரில் மிட்செல், ஹென்ரிச் கிளாசென் (WK), மார்கோ யான்சன், ஆடம் ஜம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி.
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில், கேப்டனாக பாட் கம்மின்ஸ், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் என 5 ஆஸ்திரேலியா வீரர்கள் இடம்பிடித்து ஆதிக்கம் செலுதியுள்ளனர். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், ஃபாஸ்ட் பவுலர், கேப்டன் என அனைத்து டிக்கையும் ஆஸ்திரேலியா வீரர்களே பிடித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அஸ்வின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராகவும், ஜடேஜா நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவிலிருந்து ஏன் பேட்ஸ்மேன்கள், ஃபாஸ்ட் பவுலர்கள் என யாரும் இடம்பிடிக்கவில்லை என தெரியவில்லை.
ICC சிறந்த TEST அணி 2023: உஸ்மான் கவாஜா (AUS), திமுத் கருணரத்ன (SL), கேன் வில்லியம்சன் (NZ), ஜோ ரூட் (ENG), டிராவிஸ் ஹெட் (AUS), அலெக்ஸ் கேரி (WK, AUS), பாட் கம்மின்ஸ் (கேப்டன், AUS), மிட்செல் ஸ்டார்க் (AUS), ஸ்டூவர்ட் பிராட் (ENG), ஆர் அஸ்வின் (IND), ரவீந்திர ஜடேஜா (IND).
கடந்தாண்டு WTC காலகட்டத்தில் 17 ஆட்டங்களில் விளையாடி 45க்கு மேல் சராசரி வைத்திருக்கும் விராட் கோலி 932 ரன்களை குவித்துள்ளார். அதேபோல 11 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 758 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 6வது இடத்திலும், ரோகித் சர்மா 10வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தவிர்த்து இந்திய டெஸ்ட் அணியில் எந்த பேட்ஸ்மேன்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இவர்களை தவிர்த்து மூத்த வீரர்களாக இருந்த புஜாரா மற்றும் ரஹானே இருவரையும் இந்திய அணி ஓரங்கட்டிய நிலையில், நிலையான டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறிவருகிறது. டாப் ஆர்டரில் இருக்கும் ரோகித் மற்றும் கோலி இருவரும் சொதப்பிவிட்டால் போதும், அடுத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்திவிடுகின்றனர்.
அதேபோல இந்திய அணி வேகப்பந்துவீச்சிலும் சிராஜ் ஒருவரை மட்டுமே நம்பியிருக்கிறது. பும்ரா மற்றும் ஷமி இருவரும் காயம் காரணமாக அதிகமான போட்டிகளில் விளையாடாத நிலையில், சிராஜ் ஒருவர் மட்டுமே சிறப்பாக வீசிவருகிறார். மற்ற பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றாலும் அவர்களால் மாற்று சக்தியாக உருவெடுக்கமுடியவில்லை. இஷாந்த் ஷர்மா என்ற மூத்த பந்துவீச்சாளர் நீண்டகாலமாக டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக இருந்த நிலையில், அவருக்கடுத்து அந்த இடத்தில் இருந்த உமேஷ் யாதவையும் இந்திய அணி ஓரங்கட்டியது. இதுபோன்ற நிலையில் தற்போது வேகப்பந்துவீச்சிலும் நிலையான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா தடுமாறிவருகிறது.
பேட்டிங், பவுலிங் என இரண்டு பக்கமும் சொற்ப வீரர்களை மட்டுமே வைத்திருக்கும் இந்திய அணி விரைவில் அதற்கான மாற்று வீரர்களை தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.