ஒவ்வொரு நாட்டிலும் புதிதாக லீக் கிரிக்கெட் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவிலும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. MLC எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் ஜூலை 13ம் தேதி தொடங்கியது. லீக் சுற்றின் முடிவுகள் 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சியாட்டில் ஓர்காஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. MI நியூ யார்க் அணி வாஷிங்டன் ஃப்ரீடமை எலிமினேட்டரில் வீழ்த்தி சேலஞ்சர் போட்டிக்குத் தகுதிபெற்றது. அந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது MI.
மேஜர் லீக் கிரிக்கெட் வரலாற்றின் முதல் இறுதிப் போட்டி திங்கள் அதிகாலை டாலஸில் உள்ள கிராண்ட் பிராய்ரி மைதானத்தில் நடைபெற்றது. MI கேப்டன் கரண் பொல்லார்ட் காயம் காரணமாக இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. அதனால், நிகோலஸ் பூரணே கேப்டனாக செயல்பட்டார்.
டாஸ் வென்ற அவர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சியாட்டில் ஓர்காஸ் அணிக்கு குவின்டன் டி காக் மட்டுமே நிலைத்து நின்று ஆடினார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். முதல் 10 ஓவர்களின் முடிவில் அந்த அணியின் ரன்ரேட் எழு ரன்களை சுற்றியே இருந்தது. அதன்பிறகு அடித்து ஆட முற்பட அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. குறிப்பாக ரஷீத் கான் பந்துவீச்சை எதிர்கொள்ள சியாட்டில் அணி தடுமாறியது.
அந்த அணியின் மிகவும் நம்பிக்கை நாயகன் ஹெய்ன்ரிச் கிளாசன் வெறும் நான்கே ரன்களில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுபம் ரஞ்சனே மட்டுமே டி காக்கிற்கு ஓரளவு ஆதரவளித்தார். 34 பந்துகளில் அரைசதம் கடந்த டி காக், 52 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து 17வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் டுவைன் பிரிடோரியஸ் 7 பந்துகளில் 21 ரன்கள் விளாச, 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது சியாட்டில். ரஷீத் கான், டிரென்ட் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டிருக்கும் போல்ட், மொத்தம் 8 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார்.
182 ரன்களை சேஸ் செய்த MI அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அந்த அணியின் ஓப்பனர் ஸ்டீவன் டெய்லர் இமாத் வசீம் வீசிய இன்னிங்ஸின் மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆனார். அடுத்து களம் புகுந்த கேப்டன் நிகோலஸ் பூரன் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. வந்த வேகத்தில் தன் பேட்டை சுழற்ற ஆரம்பித்தார். சிக்ஸர்களும் ஃபோர்களுமே பறந்துகொண்டே இருந்தது. வெறும் 16 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார் அவர். அப்போதே 6 சிக்ஸர்கள் விளாசியிருந்தார் அவர். வெறும் 7.4 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது MI நியூயார்க்.
ஷயான் ஜெஹாங்கிர், டிவால்ட் பிரெவிஸ் போன்றவர்கள் சிறிய இன்னிங்ஸ்கள் ஆடி அவுட் ஆயிருந்தார்கள். ஆனால், பூரண் ஆடிய ஆட்டத்துக்கு வேறு எவரின் பங்களிப்பும் தேவைப்படவில்லை. தனி ஆளாக ருத்ரதாண்டவம் ஆடினார் அவர். 16 பந்துகளில் முதல் 50 ரன்களைக் கடந்த அவர், அடுத்த 50 ரன்களை அடிக்க 24 பந்துகள் எடுத்துக்கொண்டார். இந்த சீசனில் அடிக்கப்படும் இரண்டாவது சதம் இது. இதற்கு முன் இந்த இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் கிளாசன் சதம் அடித்திருந்தார். பூரணைக் கட்டுப்படுத்த சியாட்டில் கேப்டன் பார்னெல் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இறுதியில் 16வது ஓவரின் முடிவிலேயே இலக்கை எட்டியது அந்த அணி. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியை வென்று மேஜர் லீக் கிரிக்கெட்டின் முதல் சாம்பியன் ஆனது அந்த அணி.
55 பந்துகளை சந்தித்த பூரண் ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் குவித்தார். இதில் 10 ஃபோர்களும், 13 சிக்ஸர்களும் அடக்கம். அதனால் ஆட்ட நாயகன் விருது வென்றார். அதுமட்டுமல்லாமல் 388 ரன்கள் குவித்து இந்த சீசனின் டாப் ஸ்கோரராகி தொடர் நாயகன் விருதும் வென்றார் அவர்.
இந்தியாவில் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய MI, இப்போது அமெரிக்காவிலும் தங்கள் கொடியை பறக்கவிட்டிருக்கிறது. இந்த ஆண்டு நடந்த வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரையும் மும்பை இந்தியன்ஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.