2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களின் குடும்பத்தினரை வைத்து இந்த அணியை அறிவித்திருப்பது வெகுவாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காயத்தால் அவதிப்பட்டுவந்த கேப்டன் வில்லியம்சன் இந்தத் தொடர் மூலம் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.
வழக்கமாக ஒரு கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைக்கான ஸ்குவாடை அறிவிக்கும்போது சர்ச்சைகள், விமர்சனங்கள், விவாதங்களே அதிகம் சூழ்ந்திருக்கும். ஆனால் நியூசிலாந்து அணி இன்று காலை தங்கள் உலகக் கோப்பை அணியை அறிவித்தது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. அந்த நெகிழ்ச்சிக்குக் காரணம், அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இல்லை. அணியை அவர்கள் அறிவித்த விதம்.
இன்று காலை பிளேக் கேப்ஸின் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. 'உலகக் கோப்பையில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை அவர்களின் நம்பர் 1 ரசிகர் அறிமுகம் செய்கிறார்கள்' என்று அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில் அந்த 15 வீரர்களின் குடும்பத்தினர் அந்த வீரர்களின் கேப் நம்பரை (எத்தனையாவது வீரராக அணியில் அறிமுகம் ஆனார்களோ அதுவே கேப் நம்பர்) குறிப்பிட்டு அந்த வீரர்களின் பெயரையும் சொன்னனர். உதாரணமாக "பிளேக் கேப் ODI நம்பர் 171. மை டேட் (என் தந்தை) டிரென்ட் போல்ட்" என்று தன் தந்தையின் பெயரை அறிவித்தார் போல்ட்டின் மகன். இப்படி ஒவ்வொரு வீரரின் தாய், பாட்டி, காதலி, மனைவி, மகள், மகன் ஆகியோர் அந்த வீரர்களின் பெயரை அறிவித்தனர்.
இதுவரை இப்படி எந்த அணியும் குடும்பத்தினரை வைத்து ஒரு ஸ்குவாடை வெளியிட்டதில்லை. அதனால் இது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே நியூசிலாந்து அணி அனைவருக்கும் பிடித்த அணியாக இருக்கும். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், இந்த அணியின் மீது ஒரு மதிப்பு இருக்கும். இந்த வீடியோ அந்த மதிப்பைப் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
இப்போது அந்த அணியிலிருக்கும் வீரர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்த அணியில் மிகவும் குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது காயமடைந்த வில்லியம்சன், அந்தத் தொடரிலிருந்து உடனடியாக வெளியேறினார். மேலும், அவர் உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பதும் சந்தேகம் என்று அப்போது கூறப்பட்டது. இருந்தாலும் தற்போது காயத்திலிருந்து மீண்டு உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுவிட்டார் அவர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற பெரும்பாலான அணிகளின் கேப்டன்கள் மாறிவிட்டனர். ஷகிப் அல் ஹசன், வில்லியம்சன் இருவர் மட்டுமே இந்த உலகக் கோப்பையிலும் கேப்டனாகத் தொடரப்போகிறார்கள். ஒருவேளை வில்லியம்சன் ஃபிட்னஸ் பிரச்சனையால் ஒருசில போட்டிகளைத் தவறவிடவேண்டியதாக இருந்தால் துணைக் கேப்டன் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார்.
இந்த அணியில் இன்னொரு முக்கியமான அம்சம், இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திரா உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 23 வயதான ரச்சின் ரவீந்திரா இடது கை பேட்ஸ்மேன். இடது கை ஸ்பின்னும் வீசக்கூடியவர். அவரது ஆல் ரவுண்ட் திறனும், உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதும் அவர் இந்த அணியில் இடம்பெறுவதற்கு சாதகமாக அமைந்துவிட்டன.
பல பௌலிங் ஆப்ஷன்கள், பல விக்கெட் கீப்பர் ஆப்ஷன்கள் நிறைந்திருக்கும் இந்த அணியில், ஆடம் மில்னே, ஃபின் ஆலன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கான இடத்துக்கு ஃபின் ஆலன், வில் யங் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், ஆடுகளங்களின் தன்மை, சமீபத்திய ஃபார்ம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வில் யங் தேர்வு செய்யப்பட்டதாகவும் அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்தார். அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக உருவெடுத்துவந்த மைக்கேல் பிரேஸ்வெல், காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வராததால் இந்த அணியில் இடம்பெறவில்லை.
பேட்ஸ்மேன்கள்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), வில் யங்
விக்கெட் கீப்பர்கள்: டெவன் கான்வே, டாம் லாதம் (துணைக் கேப்டன்), கிளென் ஃபிளிப்ஸ்
ஆல்ரவுண்டர்கள்: மார்க் சேப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா
வேகப்பந்துவீச்சாளர்கள்: டிரென்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டிம் சௌத்தி
ஸ்பின்னர்கள்: ஈஷ் சோதி