நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு மிட்செல் மார்ஸ் தலைமையில் தலைமையில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி 3-0 என வீழ்த்தி ஒயிட் வாஸ் செய்தது.
இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி காம்ரான் கிரீனின் அசத்தலான 174* ரன்கள் சதத்தால் 383 ரன்கள் குவித்தது. அதற்கு பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியில், 12 வருட கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டானார் கேன் வில்லியம்சன்.
கேனை தொடர்ந்து ரச்சின் ரவிந்திராவும் டக் அவுட்டில் வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து அணி 113 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு தனியாளாக போராடிய க்ளென் பிலிப்ஸ் 71 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து 179 ரன்களுக்கு சுருண்ட நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணி தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ஸ்டீவன் ஸ்மித்தை டக் அவுட்டிலும், லபுசனேவை 2 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி டிம் சவுத்தீ ஆஸ்திரேலியாவை கலக்கி போட்டார். சவுத்தீ கோடு போட அதில் ரோடு போட்ட பிலிப்ஸ், கவாஜா, காம்ரான் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி என 5 கிளாஸ் வீரர்களின் விக்கெட்டுகளை தட்டித்தூக்கி கெத்துக்காட்டினார்.
க்ளென் பிலிப்ஸ் அபாரமான பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. க்ளென் பிலிப்ஸின் உதவியால் 369 ரன்கள் என்ற இலக்கை துரத்தி நியூசிலாந்து விளையாடிவருகிறது. டாம் லாதம், வில் யங் மற்றும் கேன் வில்லியம்சன் 3 டாப் ஆர்டர்களும் விரைவாகவே வெளியேற, ரச்சின் ரவிந்திரா பொறுப்புடன் அரைசதமடித்து விளையாடிவருகிறார். 111/ 3 என்ற நிலையில் நியூசிலாந்து விளையாடிவருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் க்ளென் பிலிப்ஸ், 16 ஆண்டுகளுக்கு சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நேப்பியரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜீதன் பட்டேல் மட்டுமே கடைசி நியூசிலாந்து ஸ்பின்னராக இருந்தார். அவரைத்தொடர்ந்து தற்போது 16 வருடங்களுக்கு பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் க்ளென் பிலிப்ஸ். இதன்மூலம் டேனியல் விட்டோரி போன்ற தலைசிறந்த ஸ்பின்னர்களுடன் பட்டியலை பகிர்ந்துள்ளார் பிலிப்ஸ்.
சொந்த மண்ணில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு:
டேனியல் வெட்டோரி: ஆக்லாந்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 35-11-87-7 (மார்ச் 2000)
டேனியல் வெட்டோரி: வெலிங்டனில் இலங்கைக்கு எதிராக 42.3-6-130-7 (டிசம்பர் 2006)
ஜான் பிரேஸ்வெல்: ஆக்லாந்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22-8-32-6 (மார்ச் 1986)
டேனியல் வெட்டோரி: டுனெடினில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 25-7-56-6 (டிசம்பர் 2008)
ஜான் பிரேஸ்வெல்: வெலிங்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 34.2-11-85-6 (மார்ச் 1990)
அலெக்ஸ் மோயர்: கிறிஸ்ட்சர்ச்சில் இங்கிலாந்துக்கு எதிராக 56.3-16-155-6 (மார்ச் 1951)
ஜீதன் பட்டேல்: நேப்பியரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 46-16-110-5 (டிசம்பர் 2008)
க்ளென் பிலிப்ஸ்: வெலிங்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16-4-45-5 (பிப்ரவரி 2024)