உத்தரப்பிரதேசம்: உடுக்கை, திரிசூலத்துடன் ரூ.450 கோடியில் உதயமாகப்போகும் நவீன கிரிக்கெட் மைதானம்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.450 கோடியில் நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கிறது.
வாரணாசி மைதானம்
வாரணாசி மைதானம்ட்விட்டர்
Published on

வாரணாசியில் உதயமாகும் புதிய கிரிக்கெட் மைதானம்!

இன்னும் சில தினங்களில் ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் இன்னொரு கிரிக்கெட் மைதானம் உதயமாக இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ரூ.450 கோடியில் நவீன வடிவமைப்புடன் 31 ஏக்கர் பரப்பளவில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் அமைய உள்ளது.

வாரணாசி மைதானம்
வாரணாசி மைதானம்ட்விட்டர்

ரூ.450 கோடி ஒதுக்கீடு!

இந்த மைதானத்தை பிரபல எல்டி நிறுவனம் உருவாக்க உள்ளது. யுபிசிஏ மற்றும் காற்று, நீர் மாசுபாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டு பணிகள் நடைபெற உள்ளன. ரூ.120 கோடி நிலத்திற்கும் ரூ.330 கோடி மைதானம் கட்டுமானப் பணிகளுக்காகவும் செலவிடப்பட இருக்கிறது. இந்த மைதானத்தில் மொத்தமாக 7 பிட்ச்கள், வீரர்களுக்கான பயிற்சிக் கூடங்கள், பயிற்சி மைதானங்கள், ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்புக் கூடங்கள், விஐபி பாக்ஸ் என்று அனைத்து வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.

சிவன் வடிவில் கட்டுமானப் பணிகள்!

இந்துக்கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவிலான மையப் பகுதியும் பிறை நிலா வடிவிலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் மாதிரி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 2025இல் இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரணாசி மைதானம்
வாரணாசி மைதானம்ட்விட்டர்

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், இவ்விழாவில் பிசிசிஐ மற்றும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் ஏற்கெனவே ஒரு மைதானம் இருக்கும் சூழலில், இன்னொரு மைதானம் கட்டப்படுவது ரசிகர்களிடையேயும், இளம் கிரிக்கெட் வீரர்களிடையேயும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிக கிரிக்கெட் மைதானங்கள்!

உலகிலேயே அதிக கிரிக்கெட் மைதானங்களைக் கொண்டிருக்கும் நாடு இந்தியாதான். இங்கு, மொத்தம் 52 மைதானங்கள் உள்ளன. இங்குள்ள 24 கிரிக்கெட் மைதானங்களில் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதாவது, கொல்கத்தா, சென்னை, டெல்லி, மும்பை, கான்பூர், பெங்களூரு, கட்டாக், ஜெய்ப்பூர், அகமதாபாத், மொகாலி, விசாகப்பட்டினம், ஹைதராபாத், இந்தூர், நாக்பூர், புனே, ராஜ்கோட், ராஞ்சி, தர்மசாலா, நொய்டா, கவுகாத்தி, திருவனந்தபுரம், டேராடூன், லக்னோ உள்ளிட்ட இடங்களில் அமைந்திருக்கும் மைதானங்களில் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் - ஒரு பார்வை!

இதில், உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சாதனையை அகமதாபாத்தில் உள்ள மைதானம் படைத்துள்ளது. குஜராத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் ரூ.800 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 1.30 லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்க முடியும். இந்த மைதானத்தில் உலகக்கோப்பை முதல் போட்டியும் இறுதிப்போட்டியும் நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com