அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அபுதாபியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
அதன்படி பேட்டிங் செய்த அந்த அணி, 54.5 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆயினும் இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பான விஷயம் ஒன்று நடைபெற்றது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் (மாமா மற்றும் மருமகன்) இணைந்து விளையாடியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பெரும்பாலும் ஓர் அணியில் சகோதரர்கள், சகோதரிகள் இணைந்து விளையாடுவது வழக்கம். ஆனால், இந்தப் போட்டியில் மாமாவும் மருமகனும் இணைந்து விளையாடினர். அதாவது ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டராக விளங்குபவர் இப்ராகிம் சத்ரான். இவருடைய மாமா நூர் அலி சத்ரான். இந்த இணைதான் நேற்று, ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸைத் தொடங்கியது.
எனினும், இந்த இன்னிங்ஸில் மாமா நூர் அலி சோபிக்கத் தவறினார். அவர் 7 ரன்களில் வெளியேறினார். ஆனால், அவரது மருமகன் இப்ராகிம் அரைசதம் (53 ரன்கள்) அடித்தார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய படங்கள்தான் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி, 31 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடரவுள்ளது.