நேபாள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர், சந்தீப் லமிசேன். இவர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசியக் கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம்பெற்று விளையாடி உள்ளார். மேலும், கடந்த காலங்களில் டெல்லி அணிக்காக ஐபிஎல் தொடரிலும் இடம்பெற்று விளையாடி உள்ளார்.
இந்த நிலையில், 23 வயதான சந்தீப் லமிசேன் மீது கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் கூறப்பட்டபோது, சந்தீப் லமிசேன் வெஸ்ட்இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது, தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சந்தீப் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த டெல்லி பொறியாளர்!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக அவரை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, நேபாள கிரிக்கெட் சங்கம் அவரை இடைநீக்கம் செய்தது. கடந்த ஜனவரியில் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில்தான் அவர்மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி காட்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான் சந்தீப் லமிசேனுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு, இழப்பீடு மற்றும் அபராதத்துடன் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.