2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட ஸ்குவாடுகளை ஒவ்வொரு அணிகளாக அறிவித்துக்கொண்டிருக்கின்றன. இத்தொடருக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் கடந்த சில தினங்களில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெறாமல் இருந்த வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக், உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல், நெதர்லாந்து அணியில் சீனியர் ஸ்பின்னர் ரொலாஃப் வேன் டெர் மெர்வ் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் டாப் 8 இடங்களுக்குள் இருந்ததால் இந்த உலகக் கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாகத் தகுதி பெற்றது. கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய 9 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அந்த அணியின் நிர்வாகம், இம்முறை ஒரு போட்டியையாவது வெல்லவேண்டும் என்ற முணைப்போடு ஒரு அணியை தேர்வு செய்திருக்கிறது.
ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியின் பெரும் பலமே அவர்களின் பந்துவீச்சு தான். குறிப்பாக அவர்களின் சுழற்பந்துவீச்சுக் கூட்டணி. முகமது நபி, ரஷீத் கான், நூர் அஹமது, முஜீப் உர் ரஹ்மான் என உலகத்தர ஸ்பின் பௌலர்கள் அந்த அணியில் நிறைந்திருக்கிறார்கள். இவர்கள் நால்வருமே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இந்திய ஆடுகளங்களில் இந்த வீரர்கள் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்கள் ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் விளையாடியவர்களே. குறிப்பாக நவீன் உல் ஹக் இந்த சீசன் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிரிக்கெட் உலகின் கவனம் பெற்றார். டி20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடி வந்தாலும், கடந்த 2 ஆண்டுகளாக அவர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இருந்தாலும் இந்தத உலகக் கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றிருக்கிறார். இந்த பௌலிங் யூனிட் நிச்சயம் ஒருசில அப்செட்களை இந்த உலகக் கோப்பையில் ஏற்படுத்தக்கூடும்.
2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஆல்ரவுண்டர் குல்பதின் நயிப் இம்முறை ரிசர்வ் பட்டியலில் தான் இடம் பிடித்திருக்கிறார். தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் இடம்பெற்றிருந்தாலும், உலகக் கோப்பைக்கான 15 பேரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் இந்த ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கரீம் ஜேனட், முகமது சலீம் இருவருக்கும் ரிசர்வ் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை.
பேட்ஸ்மேன்கள்: ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, இப்ராஹிம் ஜத்ரான், நஜிபுல்லா ஜத்ரான்
விக்கெட் கீப்பர்கள்: இக்ரம் அலி கில், ரஹ்மானுல்லா குர்பாஸ்
ஆல்ரவுண்டர்கள்: முகமது நபி, ரஷீத் கான், அஸ்மதுல்லா ஓமர்சாய்
வேகப்பந்துவீச்சாளர்கள்: ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன் உல் ஹக்
ஸ்பின்னர்கள்: நூர் அஹமது, முஜீப் உர் ரஹ்மான்
ரிசர்வ் வீரர்கள்: குல்பதீன் நயிப், ஷராஃபுதீன் அஷ்ரஃப், ஃபரீத் அஹமது.
நெதர்லாந்து அணியோ உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்து இந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பிடித்தது. ஆனால் அந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பல முக்கிய வீரர்களை தவறவிட்டிருந்தது அந்த அணி. காலின் அகெர்மேன், ரொலாஃப் வேன் டெர் மெர்வ், பால் வேன் மீக்ரன் மூவரும் கவுன்டி போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்ததால் அந்த குவாலிஃபயர் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் இல்லாமலும் கூட சிறப்பாக ஆடி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது நெதர்லாந்து.
பேட்ஸ்மேன்கள்: வெஸ்லி பரேஸி, மேக்ஸ் ஓ'டாட், விக்ரம்ஜித் சிங்
விக்கெட் கீப்பர்கள்: ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்)
ஆல்ரவுண்டர்கள்: காலின் அகெர்மேன், பஸ் டி லீட், தேஜா நிதானமரு, சகீப் சுல்ஃபிகுர், சைபிராண்ட் எங்கல்பிரெட்
வேகப்பந்துவீச்சாளர்கள்: ரயான் கிளீன், லோகன் வேன் பீக், பால் வேன் மீக்ரன்
ஸ்பின்னர்கள்: ரொலாஃப் வேன் டெர் மெர்வ், ஆர்யன் தத், ஷரீஸ் அஹமது