ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி டேவிட் வார்னரின் 164 ரன்கள் மற்றும் மிட்செல் மார்ஸின் 90 ரன்கள் ஆட்டத்தின் உதவியால் 487 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கத்தை அமைத்தது. ஆனால் சிறப்பாக விளையாடிய ஷபிக் மற்றும் இமாம் இருவரையும் வெளியேற்றிய லயன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தானுக்கு பெரிய தொல்லையாக மாறினார். பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 271 ரன்களில் ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய லயன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணி 223 ரன்களில் டிக்ளார் செய்து பாகிஸ்தானுக்கு 450 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 89 ரன்னில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தானின் 8 பேட்ஸ்மேன்கள் ஓரிலக்க ரன்களில் வெளியேறினர். முடிவில் 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. நாதன் லயன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் வீரர் ஃபஹீம் அஷ்ரப்பை வெளியேற்றியதின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 500வது விக்கெட்டை பதிவுசெய்தார் நாதன் லயன். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எட்டிய 3வது ஆஸ்திரேலியா வீரர் மற்றும் 8வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் பந்துவீச்சாளர்களான ஷேன் வார்ன் (708 விக்கெட்டுகள்) மற்றும் கிளென் மெக்ராத் (563 விக்கெட்டுகள்) போன்ற ஐகான்களுடன் 501* விக்கெட்டுகளுடன் இணைந்துள்ளார் நாதன் லயன்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முத்தையா முரளிதரனுக்கு (800 விக்கெட்டுகள்) பிறகு 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது ஆஃப் ஸ்பின்னர் என்ற சிறப்பையும் நாதன் லயன் பெற்றுள்ளார். இந்த அரிதான சாதனையை எட்டும் வரிசையில் 489 விக்கெட்டுகளுடன் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் வரிசையில் இருக்கிறார்.
இந்நிலையில் நாதன் லயனுக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கும் அஸ்வின், GOAT என மென்சன் செய்து வாழ்த்தியுள்ளார்.