2023 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் அதற்கான தயாரிப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கேள்விக்கான பதில் தற்போது அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 உலகக்கோப்பைகளையும் போட்டியை நடத்தும் நாடுகளே வெற்றிப்பெற்றுள்ள நிலையில், இந்திய அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் பலம்-பலவீனம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன், இந்திய அணி அழுத்தமான நேரங்களில் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணி குறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸில் பேசியிருக்கும் ஹுசைன், “இந்திய அணியை பொறுத்தவரை அவர்கள் கோப்பையை வெல்லும் விருப்பமான அணியாக இருக்கின்றனர். ஆனால் கோப்பையை வெல்லும் அணி இந்தியாதான் எனக் கூறுமளவு தெளிவான அணியாக இருக்கவில்லை. நீங்கள் அவர்களின் அணியைப் பார்த்தால், ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி என தலைசிறந்த வெள்ளை பந்தாட்ட வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் சுப்மன் கில், பும்ரா போன்ற வீரர்கள் இணைந்திருப்பது கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. இதை மட்டும் வைத்து பார்த்தால் அவர்களின் அணி வலுவானதாகவே இருக்கிறது.
ஆனால் அவர்களின் பந்துவீச்சாளர்களை பாருங்கள் அவர்களால் பேட்டிங் செய்ய முடியாது. பேட்ஸ்மேன்களால் பந்துவீச முடியாது. ஹர்திக் பாண்டியா மட்டுமே அந்த இடத்தில் டிக் செய்யப்படுகிறார். ஆல்ரவுண்டர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியிலிருந்து தனித்து தெரிகிறது” என்று பேசியுள்ளார்.
கடந்த 4 முதல் 5 உலகக்கோப்பைகளில் இந்திய அணி நாக்அவுட் போட்டிகள் வரை வந்துள்ளது. ஆனால் அவர்களால் அழுத்தம் நிறைந்த நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியவில்லை. 2019 உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விகளை குறிப்பிட்டு இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கூறுகையில், “இந்தியா நாக் அவுட் சுற்றுவரை தகுதிபெற்றுவிடும். ஆனால் நாக் அவுட் போட்டிகளில் எப்படி விளையாடப்போகிறது என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கும். அவர்களால் அழுத்தம் நிறைந்த போட்டிகளில் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட முடியவில்லை. 2019 ஒருநாள் உலகக்கோப்பை செமிபைனலில் அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாடியிருந்தால் அவர்களால் வெற்றிபெற்றிருக்க முடியும். வரும் உலகக்கோப்பையில் இந்திய அணி அச்சமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.