ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் மோதவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது மழை குறுக்கிட்டு தடைபட்டால், மீண்டும் அடுத்தநாள் போட்டியை நடத்த ரிசர்வ் டே வழங்கப்பட்டுள்ளது. PCB-யின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆசியக்கோப்பை தொடங்கும்போது இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வ் டே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஒரு லீக் சுற்று போட்டிகளுக்கு ரிசர்வ்டே அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்நிலையில் அதுகுறித்து விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் இலங்கை வீரரும் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான முத்தையா முரளிதரன்.
சென்னையில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த முரளிதரன், அர்ஜுனா ரணதுங்கா, தோனி என இருவருமே கேப்டன் cool என்ற பட்டங்களை பெற்றவர்கள். போட்டியின் நேரத்தில் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து செல்வதில் இருவருமே சிறப்பாக செயல்படக் கூடியவர்கள். 1990களில் அர்ஜுன ரணதுங்கா சிறந்த கேப்டன் என்றால், 2010ஆம் ஆண்டுகளில் எம்எஸ் தோனி உலகின் சிறந்த கேப்டனாக இருந்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக இலங்கை அணி ஒரு அணியாக செயல்படாமல் இருந்தனர். இலங்கை அணியை பொறுத்தவரை எப்போதும் நாங்கள் விளையாடிய காலத்தில் ஒற்றுமையான அணியாக செயல்பட்டதன் மூலமாகவே வெற்றியைப் பெற்றோம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அது நடைபெறவில்லை. தற்போது இலங்கையணி மீண்டும் வெற்றியை நோக்கி நகர்ந்துவருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுவதாலும் ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருப்பதாலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்திய அணியில் சிறப்பான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள், சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் உலகக்கோப்பையை பொறுத்தவரை அன்றைய தேதியில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி அமையும். எந்த அணி இறுதிவரை செல்லும் என்று பார்த்தால் பாகிஸ்தான அணி இந்த உலகக் கோப்பையில் இறுதிவரை செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சிறப்பாக விளையாடிவருகின்றனர் என்று தெரிவித்தார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், “ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே வழங்கிவிட்டு மற்ற போட்டிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து அணிகளையும் சரிசமமாக பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.