2024ம் ஆண்டுக்கான ஐசிசி யு-19 உலகக்கோப்பை தொடர், தென்னாப்பிரிக்காவில் ஜனவரி 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ”பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்” உள்ளிட்ட 16 அணிகள் A, B, C, D என நான்குபிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தின.
நடந்துமுடிந்த லீக் சுற்றுப்போட்டிகளில் விளையாடி ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள், அடுத்த சுற்றான சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெற்று விளையாடிவருகின்றன. அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நமிபியா, ஆப்கானிஸ்தான் முதலிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டு 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடந்துமுடிந்த 3 குரூப் போட்டிகளிலும் சிறந்த ரன்ரேட்டுடன் வெற்றிபெற்ற இந்திய அணி, கூடுதல் நான்குபுள்ளிகளுடன் சூப்பர் 6 சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடியது இந்திய அணி.
புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான், 126 ரன்களில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 131 ரன்கள் குவித்தார். உடன் ஆதர்ஷ் சிங் 52 ரன்கள் அடிக்க 50 ஓவர் முடிவில் 295 ரன்கள் குவித்தது இந்திய அணி.
296 என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ராஜ் லிம்பனி முதலில் தொடங்க, தொடர்ந்து பந்துவீசிய சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை நிலைக்குலைய செய்தார். பின்னர் பேட்டிங்கில் கலக்கிய முஷீர் கான் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, 81 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்தது.
அயர்லாந்துக்கு எதிரான குரூப் போட்டியில் சதமடித்து விளாசிய முஷீர் கான், அடுத்தடுத்து இரண்டு சதங்களை பதிவுசெய்து தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல், யு19 உலகக்கோப்பையில் ஷிகன் தவானுக்கு பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட சதம் விளாசிய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஷிகர் தவான் 3 சதங்களை விளாசி இருந்தார்.
சர்ஃபராஸ் கான் தம்பியான முஷீர் கான் அண்ணன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற நிலையில், யு19 உலகக்கோப்பையை கலக்கிவருகிறார்.
தம்பி முஷீர் கான் குறித்து பேசியிருக்கும் சர்ஃபராஸ் கான், “என்னை விட முஷீர் சிறந்த பேட்ஸ்மேன். நான் பேட்டிங்கில் கஷ்டப்படும்போது அவர் எனக்கு நம்பிக்கை தருகிறார். அவர் சில ஷாட்களை ஆடும் விதம் என்னை பிரமிக்க வைக்கிறது. அவருடைய பேட்டிங் திறன் சிறப்பாக உள்ளது, நான் நன்றாக பேட்டிங் செய்யாதபோதெல்லாம் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன்” என்று சர்ஃபராஸ் ESPNcricinfo இடம் கூறியுள்ளார்.
முஷீர் கானின் சிறப்பான ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது அதிரடியால் கலக்கி வரும் சூர்ய குமார் யாதவும் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் ‘என்னவொரு சிறப்பான ஆட்டம்.. இதை தொடருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.