அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற வன்முறை போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிலர் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசினா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு, போராட்டத்தை முறியடிக்க சதி திட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கலவரத்தின்போது கொல்லப்பட்டவருக்கான எஃப்ஐஆரில் வங்கதேச கிரிக்கெட் வீரரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாகிப் அல் ஹசனின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஷேக் ஹசினா உள்ளிட்டோர் அடங்கிய 147 பேர் அடங்கிய குற்றவாளிகள் பட்டியலில் 28-வது குற்றவாளியாக ஷாகிப் அல் ஹசனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் ஆகஸ்ட் தொடக்கத்தில் நடந்த போராட்டத்தின்போது கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஷாகிப் அல் ஹசன் உட்பட 147 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் வீரர் என்பதை தவிர, கலைக்கப்பட்ட ஆட்சியான அவாமி லீக்கின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். போராட்டத்தின்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மற்றும் கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலபேர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்ற கலவரத்தின்போது ஆடைத் தொழிலாளியான முகமது ரூபலின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரூபல் இரண்டு நாட்கள் கழித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய மகன் இறந்ததையடுத்து முகம்து ரூபலின் தந்தை ரஃபிகுல் இஸ்லாம் வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தார். அதில் ஷாகிப் அல்ஹசன் உட்பட 147 பேர் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
கிறிக்இன்ஃபோ வெளியிட்டிருக்கும் தகவலின் படி ஷாகிப் அல் ஹசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதை வங்கதேசத்தின் டாக்காவின் அடபோர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குற்றவழக்கின் படி, “ஆகஸ்ட் 5-ம் தேதி அடபோர் பகுதியில் உள்ள ரிங் ரோட்டில் ரூபெல் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார்தாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்" என்று டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையில் கொலை செய்யப்பட்டவர் சுடப்பட்ட ஆகஸ்டு 5-ம் தேதியன்று கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் வங்கதேசத்திலேயே இல்லை என்று கூறப்படுகிறது. ஷாகிப் அந்த நேரத்தில் கனடாவில் இருந்தார், ப்ராம்ப்டனில் நடைபெற்ற குளோபல் டி20 கனடா லீக்கில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்தார்.
ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 9 வரை கனடாவுக்குச் செல்வதற்கு முன்பு, ஜூலை நடுப்பகுதி வரை அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட்டில் பங்கேற்றிருந்தார் என கிரிக்இன்போ தெரிவித்துள்ளது. இந்த செய்தி வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.