நடந்து முடிந்த ஐபிஎல் 16-வது சீசனின் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற திருப்தியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இச்சூழலில், அம்பத்தி ராயுடு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 2019 உலகக் கோப்பை தொடரில் தாம் நீக்கப்பட்டு அந்த இடத்தில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அச்சமயத்தில் அணித் தேர்வுக்குழுவில் இருந்த எம்.எஸ்.கே. பிரசாத் உடன் கடந்த காலங்களில் சில வார்த்தை மோதல்கள் இருந்ததாகவும், அதை மனதில் வைத்துக்கொண்டு அவர் தன்னை உலகக் கோப்பையில் எடுக்காமல் விட்டிருக்கலாம் எனவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ராயுடுவின் குற்றச்சாட்டிற்கு தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத். அதில் அவர், ''தேர்வுக் குழுவில் ஐந்து தேர்வாளர்களும், கேப்டனும் இருப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இக்குழுவில் எந்தவொரு தனி நபரும் இஷ்டம்போல் முடிவு எடுத்துவிட முடியாது. ஐந்து தேர்வாளர்களின் ஒருமித்த கருத்தின்படியே முடிவு எடுக்க முடியும். ஒரு தனி நபர் முடிவை எடுக்க முடியும் என்றால், உங்களுக்கு ஐந்து தேர்வாளர்கள் தேவையில்லையே.
எனவே எடுக்கப்படும் எந்த முடிவும் ஒட்டுமொத்த தேர்வுக் குழுவின் ஒருமித்த கருத்தின்படியே நடக்கும். எனவே அம்பத்தி ராயுடுவை நீக்கியது ஒட்டுமொத்த தேர்வாளர்களின் ஒருமித்த முடிவு. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. தேர்வுக் குழுவில் நான் ஏதேனும் ஒரு கருத்தை முன்மொழியலாம். அதை மற்ற தேர்வாளர்கள் ஏற்கவும் செய்யலாம், நிராகரிக்கவும் செய்யலாம். எனவே தேர்வுக்குழுவில் தனிப்பட்ட ஒரு தேர்வாளரின் முடிவு இறுதி முடிவாக இருக்க முடியாது. உலகக் கோப்பைக்கு முந்தைய அனைத்து சர்வதேச போட்டிகளிலும் ராயுடு அணியில் இருந்தார்'' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.கே. பிரசாத்.
சம்பவத்தின் பின்னணி: 2019-இல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். 'விஜய் சங்கர் 3டி ப்ளேயர். அவரால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்பட முடியும்' என அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணமும் கூறப்பட்டது. இதையடுத்து தேர்வுக்குழுவை விமர்சிக்கும் வகையில், உலகக் கோப்பைப் போட்டிகளைப் பார்க்க புதிதாக 3டி கண்ணாடிகளை வாங்கியுள்ளேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ராயுடு. கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெற்றுள்ள நிலையில், தற்போது இதுதொடர்பாக அம்பத்தி ராயுடு வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து விரிவாக கீழ் இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் அறியலாம்....