9 பந்தில் 28 ரன் விளாசல்! இப்படிலா சிக்ஸ் அடிச்சு பார்த்ததே இல்லையே.. டிவில்லியர்ஸ் ஆக மாறிய தோனி!

ஐபிஎல் என்பதே உற்சாகம் தான். அதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் கொண்டாட்டத்தின் உச்சம். தனது 42 ஆவது வயதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் பிரம்மாண்டத்தின் சாட்சிகள்..
எம். எஸ் தோனி
எம். எஸ் தோனிpt web
Published on

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி லக்னோவில் வாஜ்பாயி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். ரஹானே நிதானமாக தொடங்கினாலும், தான் சந்தித்த முதல்பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார் ரச்சின் ரவீந்திரா. முதல் இரு போட்டிகளில் மட்டும் 35 பந்துகளில் 83 ரன்களை குவித்த அவர், அடுத்த 5 போட்டிகளில் 50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். நிதானமாக ஆடிய ருத்துராஜும் 17 ரன்களுக்கு வெளியேற திணறியது சென்னை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துபே, ரிஸ்வி சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணி 150 ரன்களைத் தொடுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்தது.

ஜடேஜாவும், மொயின் அலியும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை கரைசேர்த்தனர். 18 ஆவது ஓவரில் மொயின் அலி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

பின்னர் வந்தார் எம்.எஸ்.தோனி. MS Dhoni, right handed batsman, comes to the crease. அதிர்ந்தது அரங்கம். 124 DB. அத்தனைக்கும் நியாயம் செய்தார் ‘தல’. மோஷின் கான் தோனிக்கான தனது முதல் பந்தை வைடாக வீச, பதற்றம் தெரிந்தது. அடுத்த பந்தும் வைட்.. தன்னை நிதானமாக்கிக் கொண்டு மோஷின் அடுத்த பந்தை வீச, மிஸ்டர் கூல் அதை deep extra cover திசையில் கெடாச பவுண்டரி கிடைத்தது.

தோனி அடித்த அடுத்த சிக்ஸர் தான் கொண்டாட்டத்திற்கு உரியது. 18.2 ஆவது பந்தை மோஷின் பவுன்சராக வீச, ஆஃப் சைடில் சற்றே நகர்ந்து, கீப்பர் தலைக்கு மேல் தூக்கி அடித்தார். vintage dhoni.. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தோனி இதுபோல் ஆடி இருப்பார். அதன்பின் இதுபோன்று அவர் ஆடி யாரும் பார்த்திருக்க முடியாது. இதுமாதிரியான ஷாட்கள் பந்துவீச்சாளரை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்கும். 18 ஆவது ஓவரில் மட்டும் மோஷின் 3 வைட்களை வீசினார். அனைத்தும் தோனிக்கு எதிரானவை.

ஒருவழியாக ஓவர் முடிய 20 ஆவது ஓவரை வீசினார் யஷ் தாக்கூர். முதல் இரு பந்துகளை ஜடேஜா ஆட மூன்றாவது பந்து தோனிக்கு கிடைத்தது. காட்டாறாக ஆடிக்கொண்டிருக்கும் நபருக்கு எதிராக என்ன மாதிரியான பந்தை வீசுவது. வேகமாக ஓடிவந்த யஷ் தாக்கூர் ஸ்லாட்டில் வீச, ராக்கெட் விட்டார் தோனி. மிகப்பெரிய சிக்ஸர். கிட்டத்தட்ட 101 மீட்டர். அந்த சிக்ஸருடன், 20 ஓவரில் மட்டும் 65 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

19.4 ஆவது பந்தை யாஷ் தாக்கூர் ஆஃப் சைட் யார்க்கராக வீச முயல, பேட்டில் எட்ஜ் ஆகி அதுவும் பவுண்டரி ஆகியது. தோனி சிங்கிள் எடுத்தாலும் கொண்டாட்டம் என்ற கணக்கில், எட்ஜ் ஆகி பவுண்டரி ஆனதும் ரசிகர்களுக்கு உற்சாகம் தான். இன்னிங்ஸின் இறுதிப் பந்து. அனைவரும் எதிர்பார்ப்பது சிக்ஸர்கள். யஷ் தாக்கூர் அதே வைட் யார்க்கரை வீச, தட்டிவிட்டார் தோனி. deep backward பாயிண்டில் பவுண்டரி ஆனது. தனது பணி அதிரடியாக இன்னிங்ஸை முடிப்பது அதை சிறப்பாக செய்தார் தோனி. உதாரணமாக ஒன்றை மட்டும் சொல்லலம். பவர் ப்ளேவில் சென்னை அணியின் ரன்ரேட் 8.5. மிடில் ஓவர்களில் 6.2. இறுதி 3 ஓவர்களில் மட்டும் 15.75 ஆக இருந்துள்ளது ரன்ரேட்.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் பேட் செய்துள்ள தோனி, 34 பந்துகளை எதிர்கொண்டு 87 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 255.8. அது தோனி..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com