சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் பல போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தாலும் ரசிகர்களின் பாசம் மட்டும் குறைந்தபாடில்லை. அது சென்னையாக இருந்தாலும் சரி வெளி மைதானமாக இருந்தாலும் சரி மஞ்சள் நிறத்தால் மைதானங்களை நிரப்பிவிடுவார்கள் அன்புடன் பாய்ஸ். இந்த பட்டாளம் பல கிலோமீட்டர் தூரம் கடந்து வருவது தோனி என்னும் ஒற்றை மனிதருக்காக. ஆம், தோனியின் முகத்தை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் மைதானங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். அப்படித்தான் நேற்றைய தினமும் குஜராத் நரேந்திர மோடி மைதானம் மஞ்சள் வண்ணத்தால் ஜொலித்தது.
மிகவும் முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது. 232 என்ற இமாலய இலக்கை குஜராத் நிர்ணியிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தோல்வியை மறக்கடிக்கும் அளவிற்கு ஆட்டத்தின் இறுதியில் இரண்டு சம்பவங்கள் நடந்தது.
வழக்கம்போல் கடைசி 2 - 3 ஓவர்கள் ஆடும் நிலையில்தான் நேற்று தோனி களத்திற்கு வந்தார். தோனி களத்திற்கு வரும்போதே கிட்டதட்ட ஆட்டம் கைவிட்டு போய்விட்டது. 20 பந்துகளில் 67 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் உள்ளே வந்தார். தோனியை பொறுத்தவரை இரண்டு விஷயங்களில் கவனமாக இருப்பார். ஒன்று முடிந்தால் வெற்றிக்கோட்டை தொட்டுவிட வேண்டும். இல்லையென்றால் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவவேண்டும். அடித்துவிளையாட முற்பட்டு ஆட்டமிழந்துவிடக்கூடாது.
அதேபோல் தான் நேற்றைய ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் 196 ரன்களை எட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மோஹித் சர்மா வீசிய 19 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்ட தோனி, ரஷீத் கான் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றினார். அதுவும், முதல் பந்தை இறங்கி வந்து ஹெலிகாப்டன் ஷாட் அடித்தார்.
அடுத்த மூன்று பந்துகள் டாட் ஆக, கடைசி பந்தில் ஒரு பவுண்டரி விளாசினார். மூன்று சிக்ஸரில் இரண்டு சிக்ஸர்களை ஒற்றை கைகளாலே அடித்து அசத்தினார் தோனி.
மொத்தத்தில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உடன் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். தோனி விளாசிய மூன்று சிக்ஸர்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்துதான். ஓரளவும் தோல்வியின் காயத்தை அது ஆற்றி இருக்கும். இன்னும் இரண்டு போட்டிகள் இருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் தெம்பாக இருக்கிறார்கள்.
ரசிகர்களை மகிழ்வடைய செய்த மற்றொரு சம்பவமும் நேற்றையைப் போட்டியில் நிகழ்ந்தது. தோனியின் தீவிரமான ரசிகர் ஒருவர் நேற்று அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது காவலர்களை தாண்டி உள்ளே நுழைந்தார். தூரத்தில் ரசிகர் தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்த தோனி அவரும் தப்பிப்பது போல் சிறிது தூரம் ஜாலியாக ஓடினார். இது தோனியின் செம்ம சேட்டையான சம்பவமாக இருந்தது. பின்னர் அந்த ரசிகர் தோனி காலி விழுகிறார். பின்னர், அவரை ஆரத்தழுவுகிறார். அதன் பிறகு தோனி செய்ததுதான் நெகிழ்ச்சியான ஒன்று.
அந்த ரசிகரை சற்று நேரம் ஆசுவாசப்படுத்தி ஏதோ அவரிடம் பேசுகிறார் தோனி. பின்னர் காவலர்கள் வந்து அவரை பிடித்து செல்லவும், அப்பொழுதும் அக்கறையோடு அந்த ரசிகருக்காக ஏதோ பேசினார் தோனி. அதனால், பொறுமையாக அந்த ரசிகரை காவலர்கள் அழைத்துச் சென்றனர்.
ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகிறார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளனர். தற்காலத்தை பொறுத்தவரை விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி ஆகிய மூவருக்கும் இது அடிக்கடி நடக்கும். இதில் தோனி ரொம்பவே ஸ்பெஷல். நேற்றைய போட்டியில் தோற்றதை கூட அந்த ரசிகரின் செயலும் அதற்கு தோனி செய்த ரியாக்ஷனும் சற்றே மறக்கடித்துவிட்டது என்றே சொல்லலாம்.
போட்டி முடிந்த பிறகு தோனியிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டே சென்றார் ரஷித் கான்.
பின்னர் அவர் பேசுகையில், “தோனி விளையாடுகிறார் என்றாலே தனி உணர்வுதான். அது எங்களுக்கும் எனர்ஜியை கொடுக்கும். அவருடன் விளையாடுவதில் மகிழ்ச்சி. தோனி எங்கு வந்து விளையாடினாலும் ஒரே மாதிரியான வரவேற்புதான் கிடைக்கும்” என்றார்.