நேற்று 15.. இன்று 22.. தொடர்ந்து குறைந்த ரன்னில் சுருளும் மங்கோலியா! டக் அவுட்டிலும் தொடரும் சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலிய அணி 22 ரன்களுக்குச் சுருண்டது.
asian games 2023
asian games 2023twitter
Published on

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வரும் 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில விளையாட்டுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் இடம்பெற்றுள்ளது.

அதேநேரத்தில், இதில் தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. எனினும் இந்தோனேசியா, மங்கோலியா, மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடின.

இந்த நிலையில், ஹாங்காங் மற்றும் மங்கோலியா ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையே இன்று (செப்.20) காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த மங்கோலிய அணி, ஹாங்காங் அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஹாங்காங் அணியில் தொடக்க வீராங்கனை 30 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். பின்னர் இடையில் அவ்வணி விக்கெட்களை தாரை வார்த்தாலும் கேப்டன் கேரி சான் பொறுப்புணர்ந்து ஆடினார். அவர் 39 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 70 ரன்கள் குவித்தார்.

அவருக்குப் பின் வந்த வீராங்கனைகளான டூ யீ ஷானும் (34 ரன்கள்), மரியம் பிபியும் (30 ரன்கள்) நல்ல பங்களிப்பைத் தந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களைக் குவித்தது. இதில் மங்கோலிய அணி 36 ரன்களை எக்ஸ்ட்ராகவாக வழங்கியிருந்தது. நேற்றைய இந்தோனேஷிய போட்டியில் இதே அணி, 49 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மங்கோலிய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியில் எர்ட்னேஸ்வத் மற்றும் மெண்ட்பாயர் ஆகிய வீராங்கனைகள் மட்டும் அதிகபட்சமாக தலா 5 ரன்கள் எடுத்திருந்தனர். 3 வீராங்கனைகள் தலா 2 ரன்களில் நடையைக் கட்ட, ஒரேயொரு வீராங்கனை மட்டும் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்றையப் போட்டியிலும் 5 வீராங்கனைகள் டக் அவுட் முறையில் (0 ரன்) வெளியேறினர்.

இறுதியில் மங்கோலிய அணி ஹாங்காங் அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 14.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து ஹாங்காங் அணி, 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதே தொடரில் நேற்று நடைபெற்ற இந்தோனேசியாவுக்கு எதிரான போட்டியிலும் மங்கோலிய வீராங்கனைகள் 7 பேர் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தனர். அத்துடன், 15 ரன்களிலும் அந்த அணி மோசமான சாதனை படைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com