உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜன.22ஆம் தேதி, பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இக்கோயிலைப் பார்வையிடவும், பால ராமரை வழிபடவும் தற்போது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு செல்கின்றனர். அயோத்தி ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, மிதாலி ராஜ் போன்ற கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஜெய் ஸ்ரீ ராம், அல்லாஹூ அக்பர் என்று ஆயிரம் முறை உச்சரிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் அவர் 24 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இரு போட்டிகளில் 5 விக்கெட்களையும், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் முகமது ஷமி வீழ்த்தி இருந்தார். இலங்கைக்கு எதிராக 5 விக்கெட்டை வீழ்த்திய பிறகு முட்டிப்போட்டு தரையில் கை வத்தது (ஸஜ்தா போல் இருந்ததால்) ட்ரோல் செய்யப்பட்டது. அவர் பிரார்த்தனை செய்வதுபோல் சென்றுவிட்டு, பின்னர் பின் விளைவுகளால் பாதிக்கப்படலாம் என பயந்து பின்வாங்கிவிட்டதாக ஒரு தரப்பு விமர்சனம் செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் இது குறித்து பேசியிருந்த ஷமி, “தொடர்ந்து முழு வீச்சில் பந்துவீசியபோது 5-வது விக்கெட் கிடைத்ததும் தரையில் கைவைத்து முட்டிப்போட்டேன். இதற்கான சரியான அர்த்தத்தை பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டனர். ஆனால் இந்த சம்பவத்தை தவறாகப் புரிந்துகொண்டவர்களுக்கு வேறு வேலையில்லை என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது நாள்பட்ட குதிகால் பிரச்னையின் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வரும் அவர், காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இந்நிலையில், நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்திருந்த பேட்டியில் மேற்கண்ட கருத்தை சொல்லியுள்ளார்.
அவர் கூறியதாவது, “அனைத்து மதங்களிலும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை விரும்பாத 5-10 பேர் இருக்கத்தான் செய்வார்கள். ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. 1000 முறை கூட சொல்லலாம். அதேபோல் அல்லாஹூ அக்பர் என எனக்கு சொல்லத் தோன்றினால் நானும் சொல்வேன். இப்படிச் செய்வதால் என்ன வேறுபாடு வந்துவிடப்போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.