இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று, (நவ.15) முதலாவது அரையிறுதிப் போட்டியில், மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
முன்னதாக அவ்வணியின் தொடக்க பேட்டர்களான டேவன் கான்வே மற்றும் ரக்சின் ரவிந்திரா ஆகிய இருவரையும் முகம்மது ஷமி பெவிலியன் அனுப்பினார். இதனால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால், அந்த நம்பிக்கையை அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சனும் மிட்சலும் பொய்யாக்கினர். ஆம், அவர்கள் இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டதன் ரன்களையும் விரைவாகச் சேர்த்தனர். இந்த நிலையில், 29வது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட கேப்டன் வில்லியம்சன், அந்தப் பந்தைத் தூக்கி அடித்தார். அது, முகம்மது ஷமியின் கைகளுக்கு நேராகச் சென்றது. ஆனால், அந்த கேட்சைத் தவறவிட்டார், ஷமி. இக்கட்டான நேரத்தில் வந்த அந்த கேட்சை ஷமி, தவறவிட்டதால், இந்திய ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பழிச்சொல்லுக்கு ஆளானார். காரணம், அந்த விக்கெட்டை எடுத்திருந்தால், இந்திய வெற்றியின் இன்னும் உறுதியாகி இருக்கும்.
என்றாலும், தாம் செய்த தவறை, தானே நிவர்த்தி செய்தார், ஷமி. ஆம், 33வது ஓவரை வீசிய ஷமி, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வில்லியம்சனை 69 ரன்களிலும், டாம் லாதத்தை டக் அவுட் முறையிலும் வீழ்த்தி தவறுக்கு தக்கபலனைத் தேடிக் கொண்டார். தவிர, இன்றைய போட்டியில் அவர் 4 விக்கெட்களை வீழ்த்தியதன்மூலம் உலகக்கோப்பையில் அதிவேகமாக 50 கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 17 இன்னிங்ஸ்களில் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
இவருக்கு அடுத்து மிட்செல் ஸ்டார்ச் 19 இன்னிங்ஸில் 50 விக்கெட் எடுத்துள்ளார். மலிங்கா 25 இன்னிங்ஸில் 50 விக்கெட் எடுத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடர்களில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையையும் முகம்மது ஷமி படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் மிட்செல் ஸ்டார்க் 941 பந்துகளிலும், மலிங்கா 1,187 பந்துகளிலும் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அதன் பிறகும் ஷமியின் விக்கெட் வேட்கை நிற்கவில்லை. அடுத்தடுத்து மேலும் 3 விக்கெட் வீழ்த்தினார். ஷமியின் துள்ளியமான பந்துவீச்சியில் நியூசிலாந்து அணி 327 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1983, 2003, 2011 ஆண்டுகளுக்கு பிறகு நான்காவது முறையாக இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
ஷமி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதையும் படிக்க: ரோகித், கோலி வரிசையில் சத்தமின்றி சாதனை படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!