குஜராத்துக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் தமிழக ஆல் ரவுண்டர் முகமது. பந்துவீச்சின்போது 5 விக்கெட்டுகள் வீழ்திய அவர், பேட்டிங்கில் 85 ரன்கள் விளாசி தமிழக அணியை சரிவில் இருந்து மீட்டார். 14 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்கள் எடுத்திருக்கிறது.
2024 ரஞ்சி சீசன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. இதில் தமிழ்நாடு அணி சி பிரிவில் இடம்பெற்றிருக்கிறது. லீக் சுற்றின் முதல் போட்டியில் குஜராத் அணியை வல்சாத் சர்தார் வல்லபாய் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது தமிழ்நாடு. வெள்ளிக் கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாட்டு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆரம்பத்தில் நன்கு விக்கெட் வீழ்த்த முடியும் என்ற அவரது எதிர்பார்ப்பு ஏற்றது போலவே போட்டியைத் தொடங்கினார்கள் தமிழ்நாடு பௌலர்கள். ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே குஜராத் ஓப்பனர் ஆர்யா தேசாயை வீழ்த்தினார் சந்தீப் வாரியர். இரண்டாவது ஓவரை வீச வந்த முகமது, முதல் பந்திலேயே மிகப் பெரிய விக்கெட்டான பிரயங்க் பஞ்சாலை பெவிலியனுக்கு அனுப்பினார்.
நான்காவது விக்கெட்டுக்கு ஹிங்ராஜியா, உமாங் குமார் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அவர்களை அடுத்தடுத்து ஓவரில் வெளியேற்றி மீண்டும் தமிழக அணியை நல்ல நிலைக்கு எடுத்து வந்தார். ஹிங்ராஜியாவை வெளியேற்றிய அதே ஓவரில் உர்வில் படேல் விக்கெட்டையும் கைப்பற்றினார் முகமது. குஜராத் அணியின் கடைசி விக்கெட்டாக பிரியாஜித்சிங் ஜடேஜாவையும் அவரே வீழ்த்தினார். இது முகமதுவின் ஐந்தாவது விக்கெட்டாக அமைந்தது. 72.3 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது குஜராத்.
அடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய தமிழக அணி ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியாமல் தடுமாறியது. அர்சான் நாக்வவ்ஸ்வாலா, ரவி பிஷ்னாய் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த, தொடர்ந்து சரிவை சந்தித்துக்கொண்டிருந்தது தமிழ்நாடு. ஓரளவு தாக்குப்பிடித்திருந்த விஜய் ஷங்கர் ஆறாவது விக்கெட்டாக வெளியேறியபோது தமிழ்நாடு அணி வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அணியின் ஸ்கோர் 101 ரன்களாக இருக்கையில் கேப்டன் சாய் கிஷோரும் ஏழாவது விக்கெட்டாக வெளியேறினார். அதன்பிறகு தான் களம் கண்டார் முகமது.
ஜெகதீசனுக்கு முகமது ஓரளவு சப்போர்ட் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அணியின் ஸ்கோர் 119 ரன்களாக இருந்தபோது ஜெகதீசனும் வெளியேறினார். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில், ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது - சந்தீப் வாரியர் கூட்டணி பேட்டிங்கிலும் தமிழ்நாட்டுக்கு கைகொடுத்தது. அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கிய முகமது ஃபோர்களும், சிக்ஸர்களுமாக அடிக்கத் தொடங்கினார். அதனால் தமிழக அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 85 ரன்களுக்கு அவுட் ஆனார் முகமது. வெறும் 99 பந்துகளில் 11 ஃபோர்கள், 4 சிக்ஸர்களுடன் இந்த ஸ்கோரை எடுத்தார். முகமது - சந்தீப் வாரியர் ஜோடி ஒன்பதாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தது. முகமதுவின் இந்த அபார ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் சேர்த்தது தமிழ்நாடு.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய குஜராத் அணி, இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருக்கிறது. அந்த மூன்று விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியரே வீழ்த்தினார்.
பீஹாருக்கு எதிரான போட்டியில் மும்பை அணி நல்ல நிலையில் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை, 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த பீஹார் அணி, இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்திருக்கிறது. மோஹித் அவாஸ்தி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
டெல்லியில் நடக்கும் போட்டியில் புதுச்சேரி அணி டெல்லிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துக்கொண்டிருக்கிறது. முதலில் ஆடிய டெல்லி அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. புதுச்சேரி பௌலர் கௌரவ் யாதவ் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 113 ரன்கள் எடுத்திருக்கிறது.