2023 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்லவேண்டுமென்று இந்திய ரசிகர்கள் அதிகப்படியான ஆசையுடன் இருந்தது போலவே, முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃபும் அதிகமான ஆசையுடன் இருந்தார். அதனால் தான் இந்தியா இறுதிப்போட்டியில் இந்தியா தோல்விபெற்ற போதும் கூட, “ஆஸ்திரேலியா கோப்பையை வென்றிருக்கலாம், ஆனால் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் சிறந்த அணி இந்தியா தான்” என்று கைஃப் பகிரங்கமா தெரிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்களில் டேவிட் வார்னர், “முகமது கைஃப் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் அணி பேப்பரில் சிறந்த அணியாக இருந்தால் மட்டும் போதாது, அந்த நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அதுதான் கோப்பையை வெல்லும்” என்று எதிர் கமெண்டை போட்டு பதிலடி கொடுத்தார். ஆனாலும் முகமது கைஃப் அவருடைய கருத்தில் மாற்றமில்லாமல் இருந்தார். அந்தளவு அவர் இந்திய அணி வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால் தற்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பை குறித்து அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியிருக்கும் முகமது கைஃப், இந்திய அணி ஆடுகளத்தை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்ற முயற்சித்ததால் தான் கோப்பையை இழந்தது என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் லாலன்டாப் யூ-டியூப் சேனலில் நேர்காணலில் பேசியிருக்கும் முகமது கைஃப், உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஸ்லோ டிராக்கை தயார் செய்ய நினைத்து இந்தியா தானாகவே பலியாடாக மாறியது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் கைஃப், “நான் இறுதிப்போட்டிக்காக நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இருந்தேன், ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் மூன்று நாட்கள் ஆடுகளத்தை சரிபார்த்ததைப் பார்த்தேன். ஆடுகளத்தின் நிறம் மாறியது. ஆடுகளத்தில் புற்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆடுகளத்தின் தன்மையை மாற்றுவது பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்று ஹோம் டீமில் யாராவது சொன்னால், அது மிகப்பெரிய பொய். ஆடுகளத்தை சுழற்பந்துவீச்சுக்கு தகுந்தார் போல் மாற்றுவதற்கு முயற்சிக்காமல், தட்டையான ஆடுகளத்தில் விளையாடியிருந்தால் இந்தியா எளிதாக உலகக் கோப்பையை வென்றிருக்கும். ஏனென்றால் இந்திய அணியில் எங்களிடம் சாம்பியன் வீரர்கள் இருந்தனர், ஆனால் ஆடுகளத்தை மாற்றுவதற்கான முயற்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் அணி சிக்கிக்கொண்டது” என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவின் எண்ணத்தை ஆஸ்திரேலியா பொய்யாக்கியதாக கூறிய அவர், “ஆடுகளம் எப்படி விளையாடும் என்பதை பேட் கம்மின்ஸ் அறிந்திருந்தார், ஆஸ்திரேலியா பொதுவாக டாஸ் வென்ற பிறகு பேட்டிங் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திட்டத்தை மாற்றிக்கொண்டனர். ஆஸ்திரேலியர்களின் மனதில் பனி இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது, அவர்கள் ஒரு அழைப்பை எடுத்தார்கள், அது பலனளித்தது” என்று கைஃப் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா சிறந்த ஃபார்மில் இருந்ததை கோட்டைவிட்டுவிட்டதாக கூறியிருக்கும் அவர், “ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரும் அதிக ரன்கள் எடுத்திருந்தனர். ஷமி, பும்ரா, குல்தீப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். 10 போட்டிகளில் தோல்வியே பெறாத இந்திய அணி, எந்த அணிக்கும் சவால் கொடுக்கும் விதமாக விளையாடியது. ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது எனக்குத் தெரியும், ஆனால் இந்திய அணி தான் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியது” என்று கைஃப் மேலும் கூறினார்.