இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஃபீல்டருக்கு என ஒரு விருது வழங்கப்பட்டால், பெரும்பாலான இந்திய ரசிகர்களின் மனதில் எழும் ஒரே பெயர் முகமது கைஃப் என்ற பெயராக மட்டுமாகவே இருக்கும்.
தற்போதைய ஜடேஜா, விராட் கோலி இருவரும் எப்படி இரண்டு பக்கமும் இரண்டு புலிப்பாய்ச்சல் ஃபீல்டராக இருக்கின்றனரோ, 2000 காலகட்டத்தில் யுவராஜ் மற்றும் முகமது கைஃப் என்ற இரண்டு பீல்டிங் Ghost-கள் இருந்தனர். இந்திய அணியின் தாதா சவுரவ் கங்குலியை லார்ட்ஸ் மைதானத்தில் டி-சர்ட்டை கழற்ற வற்புறுத்திய வீரர் முகமது கைஃப் தான்.
முகமது கைஃப் கிரிக்கெட் விளையாட்டை மரபுரிமையாகக் கொண்டவர். இவரது தந்தை முகமது தாரிஃப் உத்தரபிரதேசம் மற்றும் ரயில்வே கிரிக்கெட் அணிக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். மற்றொருபுறம் கைஃபின் மூத்த சகோதரர் முகமது சைஃப் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்திற்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவர்களை தொடர்ந்து முகமது கைஃப்பும் ஒரு கிரிக்கெட் வீரராக ஜொலித்துள்ளார்.
பொதுவாக வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான பின்னர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கைஃப் விஷயத்தில் தலைகீழாக நடந்தது. 2000-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர், பின்னர் ODI வடிவத்தில் அறிமுகமாக இரண்டு வருடங்கள் காலதாமதமானது. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அதே ஆண்டில் தான், இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் டிராபியில் தனது சிறந்த ODI இன்னிங்ஸை விளையாடினார்.
கைஃப் தனது வாழ்க்கையின் ரோல் மாடலாக கருதிய இரண்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அவருடை இரண்டு ஐடல் வீரர்கள் என்றால் அது முகமது அசாருதீன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவர் மட்டுமே. கைஃப் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் இவ்விரு வீரர்களுடனும் சேர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார். 2000-ம் ஆண்டில் அவர் அறிமுகமானபோது, இந்த இரண்டு வீரர்களும் அதில் ஒரு பகுதியாக இருந்தனர். அது அசாருதீனின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருந்தது. அதேநேரம் கேப்டனாக சச்சின் டெண்டுல்கரின் கடைசி டெஸ்ட் போட்டியும் அதுவாகும்.
முகமது கைஃப் உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை உத்தரபிரதேச அணியில் விளையாடிய கைஃப், 2014-ம் ஆண்டு உத்தரபிரதேச அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி ஆந்திரா அணியில் சேர்ந்தார். அங்கும் அவர் கேப்டனாகவே செயல்பட்டார். பின்னர் 2015-16 சீசனில், ஆந்திரா அணியில் இருந்து விலகி சத்தீஸ்கர் அணியில் சேர்ந்தார் மற்றும் அங்குள்ள அணியுடன் ஒரு வீரராகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.