குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஹர்திக் பாண்டியா வர்த்தகம், எதிர்வரும் 2024 ஐபிஎல் ஏலத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பையில் கலக்கிய டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்செல், ஜெரால்ட் கோட்ஸீ, மதுஷங்கா, மிட்செல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் இடம்பெறவுள்ளதால் இன்னும் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில்தான், 2024 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற வீரர்கள் விவரத்தையும், தேதியையும் உறுதிசெய்து செய்தி வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.
ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் படி, 2024 ஐபிஎல் ஏலத்தில் மொத்தமாக 333 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதில் 214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 333 வீரர்களில் மொத்தமாக 116 Capped (சர்வதேச போட்டிகளில் விளையாடுபவர்கள்) வீரர்கள், 215 Uncapped வீரர்கள் பதிவுசெய்துள்ளனர். மொத்தமாக 77 வீரர்கள் விலைக்கு வாங்கப்படவிருக்கின்றனர், அதில் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ஆரம்ப விலையான 2 கோடியில் 23 வீரர்களும், 1.5 கோடியில் 13 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
ஏலத்தின் ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் முதல் செட் வீரர்களில் டிராவிஸ் ஹெட் உட்பட, ஹாரி ப்ரூக், ஸ்டீவ் ஸ்மித், மணிஷ் பாண்டே, கருன் நாயர், ரோவ்மன் பவல், ரைல் ரோஸ்ஸோவ் முதலிய 7 வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. 2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் சதமடித்த டிராவிஸ் ஹெட்டின் ஏலம் முதல்செட்டிலேயே சூடுபிடிக்கவிருக்கிறது.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக்கும், அனுபவம் வாய்ந்த மணிஷ் பாண்டே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மூன்று பேரும் ரேஸ்ஸில் ஜொலிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது செட்டில் இடம்பிடித்துள்ள 9 வீரர்களும் 2024 ஏலத்தை பிரகாசிக்க வைக்கவிருக்கின்றனர். டி20 என்றாலே ஆல்ரவுண்டர்களுக்கு தான் எப்போதும் மவுசு அதிகம், அந்தவகையில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த 9 வீரர்களும் ஏலத்தை கலக்கவிருக்கின்றனர். அதில் இடம்பெற்றுள்ள ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்செல், பாட் கம்மின்ஸ் மற்றும் ஷர்துல் தாக்கூர் இந்த 4 வீரர்களையும் வாங்க பல அணிகள் போட்டி போடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆல்ரவுண்டர் வரிசையில் மேலும் ” க்றிஸ் வோக்ஸ், வனிந்து ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய்” முதலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலிலும் கோட்ஸி, ஹர்சல் பட்டேல், வோக்ஸ், ஓமர்சாய் முதலிய வீரர்களுக்கு போட்டி அதிகமாக இருக்கும்.
இந்தமுறை விக்கெட் கீப்பரில் நல்ல ஆப்சன்கள் திறக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருந்துவரும் கேஎஸ் பரத் மற்றும் குசால் மெண்டீஸ் இருவரும் அதிக விலைக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம். அதேபோல அதிரடி வீரரான ஷார்ட், மிடில் ஆர்டர் வீரரான ஜோஸ் இங்கிலீஸ் போன்ற வீரர்களுக்கும் போட்டி அதிகமாக இருக்கப்போகிறது.
வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் மிட்செல் ஸ்டார்க், மதுசங்கா, ஹசல்வுட் மற்றும் பெர்குஷன் முதலிய வீரர்கள் ஹைலைட்டாக இருக்கின்றனர். இவர்களின் ஏலம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கப்போகிறது. மீண்டும் ஐபிஎல்லுக்கு கம்பேக் கொடுத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்ச விலைக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அவரை விலைக்கு வாங்க RCB, CSK, MI, KKR முதலிய 4 அணிகளும் போட்டிபோடும் என்று எதிர்ப்பார்ப்பு உள்ளது.
அதேபோல 2023 உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றிய தில்சன் மதுஷங்காவிற்கும் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில், ”அல்சாரி ஜோசப், ஷிவம் மாவி, சேத்தன் சக்காரியா, ஜெயதேவ் உனாத்கட், உமேஷ் யாதவ்” முதலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்பின்னர்கள் வரிசையில் அனுபவம் வாய்ந்த அடில் ரசீத் மற்றும் ஷாம்சி, முஜீப் ரஹ்மான், ஆப்கானிஸ்தானின் சாலம்கெய்ல், வெஸ்ட் இண்டீஸின் அகேல் ஹொசின், இஸ் சோதி முதலிய சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஏலம் விவரம்: டிசம்பர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் ஏலம் நடைபெறவிருக்கிறது.