2003 இறுதிப்போட்டிக்கான பழிதீர்ப்பு, 2015 அரையிறுதிப்போட்டிக்கான பழிதீர்ப்பு என்றெல்லாம் சொல்லப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியானது, இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஆஸ்திரேலியாவின் பக்கம் சென்றது இன்னும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது.
தன் நாடு பலவருடங்களாக வாங்கிய அடிக்கு பழிதீர்த்து கோப்பையை ஏந்தும் என்ற நம்பிக்கையோடு திரண்டு வந்த 1.25 லட்சம் மக்களின் கனவானது மைதானத்திலேயே கருகிப்போனது. தொடர் முழுவதும் தொட்டதெல்லாம் தங்கமாக ஜொலித்துவந்த இந்திய அணி சிறுசிறு தவறுகளால் கோப்பை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் கோட்டைவிட்டது.
இந்நிலையில் ஒருபுறம் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கும்போது, கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஸ் மதிப்புமிக்க உலகக்கோப்பை மீது கால்வைத்து எடுத்த புகைப்படம் இந்திய ரசிகர்களின் ஆதங்கத்தை அதிகரிக்கச்செய்தது.
கிட்டத்தட்ட ஒருவார காலமாக மிட்செல் மார்ஸின் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூட, மார்ஸின் அந்த புகைப்படம் தன்னை காயப்படுத்தியதாக கூறினார். இத்தகைய சூழலில்தான் மிட்செல் மார்ஸ் உலகக்கோப்பை மீது கால்வைத்த புகைப்படத்தில் எந்த அவமரியாதையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஒரு சர்ச்சைக்குரிய விசயம் குறித்து முதன்முதலாக SEN உடன் பேசியிருக்கும் மிட்செல் மார்ஸ், “அந்த புகைப்படத்தில் எந்த அவமரியாதையும் இல்லை. நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. அது தற்போது சமூக வலைதளங்களில் ஒரு பேசுபொருளாக இல்லை என்றும், போய்விட்டது என்றும் என்னிடம் சொன்னார்கள். நானும் அதுகுறித்து சமூக ஊடகங்களில் நிறைய பார்க்கவில்லை. ஆனால் அதில் அவமரியாதை செய்யும் விதமாக எதுவும் இல்லை. நான் அப்படி யோசிக்கவும் இல்லை” என்று மார்ஷ் தடாலடியாக மாற்றி கூறியுள்ளார்.
மேலும் உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடருக்கு பிறகு வீரர்களுக்கு ஓய்வேயின்றி, குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க இடம் தராமல் டி20 தொடர் நடத்தப்படுவது குறித்தும் மார்ஸ் பேசினார். இதுகுறித்து பேசுகையில், “உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடருக்கு பின் நாடு திரும்பாமல் அடுத்த தொடரில் வீரர்கள் விளையாடுவது ஒரு மூர்க்கத்தனமான விசயம். எப்படி இருந்தாலும் கடைசியில் நாங்கள் ஆஸ்திரேலியாவிற்காக விளையாடுகிறோம் என்ற உண்மையை மதிக்கிறோம். மேலும் இந்தியாவுக்கு எதிரான ஒரு தொடர் என்பது எப்போதும் மிகப்பெரியது. ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி இருக்கும் மனிதநேயம் என்னவென்றால், உலகக்கோப்பையை வென்றிருக்கும் வீரர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு சிறிது நேரம் கொண்டாட தகுதியுடைவர்கள்” என்றும் பேசியுள்ளார்.