CII எனப்படும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பாக INVESTOPIA GLOBAL என்ற முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை அடையாறில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ஐக்கிய அரபு எமிட்ரேட்ஸ் அமைச்சர் அப்துல்லா பின் டூக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேம்பட்ட உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி போன்ற முக்கிய துறைகளில் பொருளாதாரத்தை வடிவமைக்கும் சமீபத்திய வணிக மற்றும் முதலீட்டு போக்குகளை ஆராய்வதே மாநாட்டின் நோக்கமாகும். இந்த கூட்டத்தில் தமிழக அரசு மற்றும் முன்னணி இந்திய மற்றும் எமிராட்டியின் தனியார் துறை நிறுவனங்களை சேர்ந்த 500 மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மேடையில் பேசியதாவது,
“இந்தியாவில் தமிழ்நாடு பவர்புல் எஞ்சினாக விளங்குகிறது. 40,000 தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளது. 43% பெண்கள் தமிழ்நாட்டில் தான் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு. கிட்டத்தட்ட 1,50,000 பொறியாளர்கள் வருடம் தோறும் வெளியேறுகிறார்கள். டில்லி, மும்பையை தொடர்ந்து சென்னையிலும் மாநாடு நடத்தப்படுவது மகிழ்ச்சி.
விவசாய பொருட்கள், தொழில்கள் போன்றவற்றின் தேவை வளைகுடா நாடுகளுக்கு அதிகம் உள்ளது. 12 பில்லியன் டாலருக்கு மின்னணு சாதனங்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
இந்தியாவில் மொத்த மின்னணு சாதனங்களில் ஏற்றுமதியில் தமிழ்நாடு 30% அனுப்புகிறது. அடுத்த சில சர்வதேச மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டை அணுகியுள்ளது. விரைவில் முதல்வர் வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அவர், “பட்ஜெட்டை ஒரு இந்தியனாக பார்க்காமல் தமிழனாக பாருங்கள். வெறும் குப்பை தான் இருக்கிறது” என்று விமர்சித்தார்.
ஐக்கிய அரபு எமிட்ரஸ் அமைச்சர் அப்துல்லா பின் டுக் பேசுகையில், ஐக்கிய அரபு நாடுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறோம். இன்று காலை தமிழ்நாடு அமைச்சரோடும், மக்களோடும் நடைபயிற்சி மேற்கொண்டது மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே நீண்ட தொடர்பு உள்ளது. 70 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா மற்றும் UAE இடையே வர்த்தகம் நடக்கிறது. இந்தியா முதல் ஐரோப்பிய நாடுகள் வழியாக செல்லும் வர்த்தக பொருளாதார பாதை UAE வழியாக செல்ல உள்ளது என்று பேசினார்.