நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 354 ரன்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்திலும், 311 ரன்களுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும் நீடிக்கின்றனர். மேலும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 11 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
பேட்டிங் மற்றும் பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியை பாராட்டி பேசியிருக்கும் மைக்கேல் வாகன், விராட் கோலியை அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்துவீரர் லியோனல் மெஸ்ஸியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
'கிளப் ப்ரேரி ஃபயர்' போட்காஸ்டில் பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “சேஸிங்கில் விராட் கோலியை விட சிறந்த வீரர் யாரும் இல்லை. அவர் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 49வது சதத்தை பதிவுசெய்து, பைனலில் 50வது சதத்தைப் அடித்தால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்காது. ஏனெனில் இது நட்சத்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த வீரர்கள் எப்போதும் கோப்பை வெல்வதற்காகவே வருவார்கள்.
உண்மையில் நான் இந்த கூற்றை சமூக ஊடகங்களில் வைக்கிறேன் - உலகில் சிறந்த, தலை சிறந்த வீரர்கள் எப்போதும் உலகக் கோப்பைக்கு வருவார்கள். அது தான் அவர்களின் மரபை வரையறுக்கிறது. கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை எடுத்துக்கொள்ளுங்கள், அர்ஜென்டினாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என உலகக்கோப்பைக்கு வந்தார். அதை வெற்றிகரமாக செய்தும் காட்டினார்.
தற்போது விராட் கோலியும் வந்துள்ளார். அவர் ஏற்கனவே கோப்பை வென்றிருந்தாலும் இந்த உலகக் கோப்பை முழுவதும் இந்திய அணியை முன்னின்று இயக்கப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை” என புகழ்ந்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சிறந்த ஃபார்ம் குறித்து பேசியிருக்கும் வாகன், இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசையை எந்த அணியும் தடுத்து நிறுத்த முடியாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “மற்ற அணிகள் இந்தியாவை எப்படி நிறுத்தப்படுவார்கள் என்பதை பார்க்க அதிகமாக விரும்புகிறேன். இந்த நிமிடத்தில் என்னால் அதை பார்க்க முடியாது என நான் நம்புகிறேன். ஆம், நீங்கள் இந்தியாவின் ஆரம்ப விக்கெட்டுகளைப் பெறலாம். ஆனால் ஆடுகளங்கள் அவர்களை அதற்குமேல் பாதிக்கப்போவதில்லை. அவர்களை எப்படி விரைவாக 3-4 விக்கெட்டுகளுக்கு வீழ்த்தப் போகிறீர்கள்?
அதற்கான விடை எந்த அணியிடமும் இல்லை என்றே தோன்றுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை விரைவாகவே வெளியேற்றி ஆஸ்திரேலியா நெருக்கமாக வந்தாலும், அவர்களால் கூட வெற்றிபெறமுடியவில்லை. இதற்கு பிறகு யாரும் இந்தியாவை அப்படி நெருங்குவார்கள் என்று நான் பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.