போட்டி 3: ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம்
போட்டி முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
ஆட்ட நாயகன்: மெஹதி ஹசன் மிராஜ் (வங்கதேசம்)
பேட்டிங்: 73 பந்துகளில் 57 ரன்கள். 5 ஃபோர்கள்
பௌலிங்: 9-3-25-3
இந்தப் போட்டிக்கான பிரிவ்யூவில் கவனிக்கப்படவேண்டிய வீரராக நாம் குறிப்பிட்டிருந்தது மெஹதி ஹசன் மிராஜைத் தான். சமீப காலமாக இந்த ஆல்ரவுண்டர் உச்சபட்ச ஃபார்மில் இருக்கிறார். அதை உலகக் கோப்பை மேடையிலும் அரங்கேற்றியிருக்கிறார் அவர்.
மெஹதி ஹசன் மிராஜ் பந்துவீச வந்தபோது ஆப்கானிஸ்தான் அணி ஓரளவு நல்ல நிலையில்தான் இருந்தது. 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. விக்கெட் தேவைப்பட்ட நேரத்தில் பந்துவீச வந்த அவர், இரண்டாவது பந்தையே மிகவும் வெளியே வீசினார். வைடானது மட்டுமல்லாமல் பந்து பௌண்டரிக்கும் செல்ல, 5 ரன்கள் வந்தது. அதன்பின் அந்த ஓவரில் ஓரளவு கட்டுக்கோப்பாக வீசினாலும், 9 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஓவர்களை மிகவும் கட்டுக்கோப்பாக வீசினார் மிராஜ். 16-வது ஓவரில் விக்கெட் போயிருந்த நிலையில், புதிய பார்ட்னர்ஷிப் எளிதாக ரன் சேர்க்காதவாறு பார்த்துக்கொண்டார் அவர். தன் இரண்டாவது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்த மிராஜ், மூன்றாவது ஓவரை மெய்டனாக வீசினார். அடுத்த 2 ஓவர்களிலும் கூட மொத்தமே 3 ரன்கள்தான் கொடுத்திருந்தார். முதல் ஓவரில் ரன்கள் நிறைய கொடுத்திருந்தாலும், அடுத்த 4 ஓவர்களிலும் நல்ல கம்பேக் கொடுத்தார் அவர்.
அவர் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால், தொடர்ந்து அவரைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தார் கேப்டன் ஷகிப் அல் ஹசன். அதன் பலனாக, தன் ஆறாவது ஓவரில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதியை வெளியேற்றினார் மெஹதி ஹசன் மிராஜ். தன் முதல் ஸ்பெல்லில் தொடர்ந்து 7 ஓவர்கள் வீசிய அவர், 2 மெய்டன்கள் வீசியதோடு 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது ஸ்பெல் வீச வந்ததுமே அதிரடி வீரர் ரஷீத் கானை வெளியேற்றி அணிக்கு நம்பிக்கை கூட்டினார். அடுத்த ஓவரில் இன்னொரு ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மானின் விக்கெட்டும் அவருக்குக் கிடைத்தது. ஆப்கானிஸ்தான் ஆல் அவுட் ஆகிவிட்டதால் அவரால் தன் 10 ஓவர்களை முழுமையாக வீசமுடியவில்லை.
மெஹதி ஹசன் மிராஜ் பேட்டிங் செய்யக் களம் காண்ட போதும் ஆப்கானிஸ்தான் அணி ஓரளவு நல்ல நிலையில்தான் இருந்தது. ஐந்தாவது ஓவரில் வங்கதேசம் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ஓப்பனர் தன்சித் ஹசன் ரன் அவுட் ஆனார். லிட்டன் தாஸுடன் இணைந்த மெஹதி மிகவும் நிதானமாகவும் கவனத்துடனும் தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.தான் சந்தித்த முதல் 10 பந்துகளில் 7 டாட் பால்கள் ஆடினார் அவர். அதேசமயம் மற்றொரு ஓப்பனர் லிட்டன் தாஸும் ஏழாவது ஓவரில் அவுட் ஆனார். 27 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது வங்கதேசம். அதனால் மெஹதி ஹசன் மிராஜ், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ இருவர் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் அவர்கள் போட்டியை கவனமாகக் கையாண்டனர். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை மெதுவாக உருவாக்கினார்கள்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஷீத் கானை மிகவும் எளிதாகக் கையாண்டார் மெஹதி ஹசன் மிராஜ். அவர் அடித்த 5 ஃபோர்களில், மூன்று ரஷீத் கான் ஓவரில் அடிக்கப்பட்டவை. மிகவும் சிறப்பாக ஆடிய அவர், 58 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். அதன்பிறகு சற்று பொறுமையாக ஆடிய மிராஜ், 57 ரன்கள் எடுத்து நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது வங்கதேச அணிக்கு 131 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் வேறு இருந்தது. இப்படி அணியை வெற்றிக்கு மிகவும் அருகில் கொண்டுவந்து விட்டார் அவர். அதனால் ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.
ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?
"இது எனக்கு மிகப் பெரிய தருணம். கடந்த காலங்களில் நான் அதீத உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். என் முன்னேற்றத்துக்கான பாராட்டு அணி நிர்வாகத்துக்கு முழுவதும் உரித்தாக்குகிறேன். நான் ஆரம்பத்தில் கொஞ்சம் கவனமாகவே பந்துவீசிக்கொண்டிருந்தேன். ஆனால், சரியான இடங்களில் நம்பிக்கையுடனும் சீராகவும் பந்துவீசும்படி கேப்டன் ஷகிப் அல் ஹசன் என்னிடம் கூறினார். அது எனக்கு மிகவும் உதவியது. அதற்காக கேப்டனுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும். பேட்டிங்கைப் பொறுத்தவரை நான் அந்தந்த பந்தைப் பற்றியும் மட்டுமே யோசித்தேன். எப்படி இந்த ஆடுகளத்தில் தங்கி சிறப்பாக செயல்படமுடியும் என்று யோசித்தேன். ஆடுகளம் ஸ்பின்னுக்கு பெரிதும் சாதகமாக இருந்தது. அதனால் அதிக நேரம் களத்தில் நிற்க முயற்சி செய்தேன். என் கரியரில் பெரும்பாலும் நம்பர் 8 பொசிஷனிலேயே விளையாடியிருக்கிறேன். இப்போது டாப் ஆர்டரில் விளையாடக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எனக்கு எப்போதுமே வெற்றிக்கான பசி இருந்தது. இந்த அரங்கில் இப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருப்பது நிச்சயம் எனக்கு மறக்க முடியாத தருணம்" - மெஹதி ஹசன் மிராஜ்