146 ஆண்டுக்கால கிரிக்கெட் வரலாற்றில் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த இலங்கை வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் பற்றிய விவகாரம்தான் சமீபத்தில் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. கடந்த 6ஆம் தேதி டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸுக்கு வழங்கப்பட்ட வினோதமான 'அவுட்' சர்ச்சையை கிளப்பியது.
சம்பவத்தின்படி, சமரவிக்ரமா ஆட்டம் இழந்ததும் களம் புகுந்த மேத்யூஸ் தனது ஹெல்மெட்டில் வார் அறுந்துவிட்டதால் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி வெளியில் இருந்த சக வீரரை அழைத்தார்.
இதனால் அவர் பேட் செய்ய காலதாமதமாகிவிட்டதாகவும், டைம்டு அவுட்டின்படி விக்கெட் வீழந்ததாக அறிவிக்கும்படியும் வங்காளதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவர்களிடம் முறையிட்டார். உலகக் கோப்பை போட்டி விதிமுறைப்படி, ஒரு வீரர் அவுட் ஆனால், அடுத்த பேட்டர், 2 நிமிடத்துக்குள் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். அந்த விதியை மேத்யூஸ் மீறிவிட்டதாக கூறி நடுவர்கள் அவருக்கு அவுட் வழங்கினர். ’ஹெல்மெட் பிரச்னையால்தான் உடனடியாக தன்னால் பேட்டிங் செய்ய இயலாமல் போய்விட்டது’ என்று மேத்யூஸ் சொன்னதை நடுவர்கள் ஏற்கவில்லை. வங்காளதேச கேப்டனும் அப்பீலை வாபஸ்பெற மறுத்துவிட்டார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 'டைம்டு அவுட்' முறையில் ஆட்டமிழந்த முதல் வீரரானார் மேத்யூஸ்.
இதையடுத்து, மேத்யூஸுக்கு அவுட் வழங்கியது சரிதான் என்று ஒரு தரப்பினரும், சரியில்லை என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து வீடியோவுடன் ஆதாரத்தை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார், மேத்யூஸ். ’விளையாடுவதற்கு முன்பாக ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. இதன்படி, நான்காவது நடுவர் வழங்கிய தீர்ப்பு தவறானது. மேலும், ஹெல்மெட் அணிந்து, மட்டைப் பிடித்து விளையாட தயாராகி ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்தது என்பதை வீடியோ காணொளி மூலம் உறுதிப்படுத்த முடியும்’ என ஏஞ்சலோ மேத்யூஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன், “ஐசிசி விதிகளின் படி 2 நிமிடத்தில் BAT, PAD, HELMET என அனைத்துடனும் பேட்டர் களத்தில் இருக்க வேண்டும். எனவே, இச்சம்பவம் குறித்து நான் கவலைப்படவில்லை. விதியின்படியே செயல்பட்டேன். இது விமர்சிக்கப்படுமானால், ஐசிசி விதியை மாற்றிக் கொள்ளட்டும்” என்று பதிலளித்துச் சென்றார். இதையடுத்து, மேத்யூஸுக்கு ஆதரவாகவும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் செய்த செயலுக்கு எதிராகவும் உலக ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதேநேரத்தில் இதுதொடர்பாக நடுவர் ஆட்ரியன் ஹோல்ட் ஸ்டாக்கும் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் அவர், “இந்த உலகக்கோப்பை தொடர் எம்.சி.சியின் (மெர்ல்போன் கிரிக்கெட் கிளப்) கிரிக்கெட் விதிப்படிதான் நடந்து வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம். டைம் அவுட் விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள இரண்டு நிமிடத்தில் தயாராக வேண்டும். எப்போதுமே ஒரு வீரர் ஆட்டம் இழந்தவுடன் அடுத்த வீரர் இரண்டு நிமிடத்திற்குள் களத்திற்கு வருகிறாரா, இல்லையா என்பதை வீடியோ மூலம் மூன்றாம் நடுவர்கள் சோதனை செய்வார்கள்.
ஆனால், இன்று மேத்யூஸ் களத்திற்கு வருவதற்கு இரண்டு நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார். இதனை பங்களாதேஷ் அணி சுட்டிக்காட்டியவுடன் வீடியோ ஆதாரத்தைப் பார்த்துத்தான் மூன்றாம் நடுவர்கள் களத்தில் இருக்கும் நடுவருக்கு அவுட் வழங்கலாம் என்று கூறினார்கள். ஆனால், மேத்யூஸ் ஹெல்மெட் உடைந்து விட்டது என்று கூறுவதற்கு முன்பே, அவர் இரண்டு நிமிடத்தை தாண்டிவிட்டார். இதனால்தான் நாங்கள் மேத்யூஸ்க்கு அவுட் வழங்கினோம்” என கூறினார்.
இந்த நிலையில் கிரிக்கெட் ஆட்டத்துக்கான விதிமுறையை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) மேத்யூஸ் 'அவுட்' சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், ”இலங்கை வீரர் மேத்யூஸுக்கு நடுவர்கள் டைம்டு அவுட் வழங்கிய தீர்ப்பு சரியானதாகும். ஹெல்மெட் வார் அறுந்தது குறித்து மேத்யூஸ் நடுவர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. அதுகுறித்து, அவர் நடுவர்களிடம் எதுவும் சொல்லாமல் மாற்று ஹெல்மெட் கொண்டு வரும்படி சக வீரர்களுக்கு சைகை காட்டியிருக்கிறார்.
நடந்ததை நடுவர்களிடம் விளக்கி அதனை சரி செய்ய நேரம் கேட்டிருந்தால், அவர்கள் ஹெல்மெட்டை மாற்ற அனுமதித்திருக்கக்கூடும். அத்துடன் டைம்டு அவுட்டுக்கான சாத்தியக்கூற்றில் இருந்தும் தப்பித்து இருக்கலாம். பேட்டிங் செய்வதில் ஏற்பட்ட காலதாமத நேரத்தை நிறுத்திவைக்கும்படி மேத்யூஸ் கேட்காததாலும், 2 நிமிடம் கடந்துவிட்டதாக எதிரணியால் அப்பீல் செய்யப்பட்டதாலும் அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கியது சரியானதாகும். நடுவர்கள் ஆட்ட விதிமுறையின்படியே நடவடிக்கை எடுத்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.