நடப்பு உலகக்கோப்பையின் சிறந்த போட்டியாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஜத்ரானின் அபாரமான சதத்தின் உதவியால் 291 ரன்களை குவித்தது.
292 ரன்கள் என்ற நல்ல இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஸ் இங்க்லீஸ் இரண்டுபேரும் டக் அவுட்டில் வெளியேற, டேவிட் வார்னர் 18 ரன்னிலும், மிட்செல் மார்ஸ் 22 ரன்னிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர்.
49 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணியை, அடுத்து பந்துவீச வந்த ஸ்டொய்னிஸ் மற்றும் ஸ்டார்க்கை அடுத்தடுத்து வெளியேற்றி தலைகீழாக திருப்பி போட்டார். 91 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற, தனியாளாக போராடிய மேக்ஸ்வெல் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
ஒருபுறம் கேப்டன் பேட் கம்மின்ஸ் நங்கூரமிட்டு விக்கெட்டை பறிகொடுக்காமல் நிலைத்துநிற்க, மறுமுனையில் அதிரடி காட்டிய க்ளென் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களை சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து விக்கெட்டை விடாமல் விளையாடிவரும் இந்த ஜோடி 150 ரன்கள் கடந்து பார்ட்னர்ஷிப் போட்டு ஆப்கானிஸ்தானை கலங்கடித்தனர். ஒருபுறம் வலியால் துடித்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய க்ளென் மேக்ஸ்வெல், சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.
வலியால் துடித்த க்ளென் மேக்ஸ்வெல் பெரிய ஹிட்களை ஆடமுடியாமலும், ரன்னிங் ஓடமுடியாமல் தவித்தார். ஒருகனம் வலி அதிகமாக தாங்கமுடியாமல் மைதானத்திலேயே படுத்து துடித்தார். எப்படியும் மைதானத்திலிருந்து வெளியேறிவிடுவார் ஆஸ்திரேலியா தோற்றுவிடும் என நினைத்த போது, அணிக்காக தொடர்ந்து விளையாட தீர்மானித்த மேக்ஸ்வெல் தன் நாட்டின் வெற்றிக்காக களத்தில் உயிரை கொடுத்து விளையாடினார்.
ஒருபுறம் 68 பந்துகளை சந்தித்து 12 ரன்களை மட்டுமே எடுத்த கேப்டன் கம்மின்ஸ், மேஸ்வெல்லுக்கு சப்போர்ட் கொடுத்தார். வலியை பொறுத்துக்கொண்டு கடைசிவரை அதிரடியை நிறுத்தாத மேக்ஸ்வெல் 21 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என பறக்கவிட்டு 201 ரன்களை குவித்த மேக்ஸி தனியொரு ஆளாக ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
8வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்த மேக்ஸ்வெல் மற்றும் கம்மின்ஸ் ஜோடி 3 விக்கெட் வித்தியாசத்தில் நம்பமுடியாத ஒரு வெற்றியை சாதித்து காட்டியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்ச சேஸிங் இதுவாகும்.