கோல்ஃப் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரான க்ளென் மேக்ஸ்வெல், நண்பர்களுடன் சேர்ந்து கோல்ஃப் மைதானத்திற்கு விளையாட சென்றுள்ளார். விளையாடி முடித்துவிட்டு கிளப்பிலிருந்து மீண்டும் நண்பர்களுடன் தங்கும்விடுதிக்கு திரும்பியபோது கோல்ஃப் வண்டியிலிருந்து தவறி விழுந்ததால் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவருக்கு தலையில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது. மூளையதிர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் க்ளென் மேக்ஸ்வெல் அடுத்து நடைபெறவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த க்ளென் மேக்ஸ்வெல் கடந்த சில மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றிருந்தார். இந்தநிலையில் மீண்டும் காயத்தால் மேக்ஸ்வெல் பாதிக்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பாதிப்பாக அமையக்கூடும்.
ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்திருந்த அந்த அணி, தற்போது தான் 4 போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. ஒருவேளை அடுத்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தால், பெரிய பிரச்னையாக மாறக்கூடும்.
மேக்ஸ்வெல்லின் விபத்து குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், “கிளப்ஹவுஸிலிருந்து அணியின் பேருந்துக்குக் திரும்ப செல்லும் போது, கோல்ஃப் வண்டியின் பின்புறத்தில் பயணித்த மேக்ஸ்வெல் பிடிமானத்தை தவறவிட்டதால் கீழேவிழுந்து மூளையதிர்வு ஏற்பட்டது. எனவே அவர் அடுத்த சில நாட்களுக்கு மூளையதிர்வு நெறிமுறைகளின் படி சிகிச்சையில் இருப்பார். 6 முதல் 8 நாட்களுக்கு அவர் கிடைக்கமாட்டார் என்பதால் துரதிர்ஷ்டவசமாக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை அவர் இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல்லுக்கு மாற்றுவீரராக கேம்ரான் க்ரீன் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற வீரர்கள் இருந்தாலும், கடந்த போட்டியில் 40 பந்தில் உலகக்கோப்பை சதத்தை கொண்டுவந்தவருக்கு எந்த வீரரை கொண்டுவருவது என்ற குழப்பத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. அடுத்த 3 போட்டிகளில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக மோதவிருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிராக அந்த அணி தோற்கும் பட்சத்தில், ஆப்கானீஸ்தான் உடனான போட்டியில் அதிக அழுத்தத்திற்கு ஆஸ்திரேலியா செல்லும்.